இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவு: கணக்கிடும் ஒன்பிளஸ் வாட்ச்
உடல்நிலையை எப்போதும் கண்காணிக்க வேண்டிய கட்டாயத்தில் எல்லோரும் இருக்கும் கால கட்டம் இது. அதுவும் இரத்தத்தில் ஆக்ஸிஜன் அளவை அறிந்து கொள்வது இன்றைய நாள்களில் மிகவும் முக்கியமானதாகும்.
இதய துடிப்பு விகிதம், இரத்தத்தில் ஆக்ஸிஜன், தூக்கம், மன அழுத்தம், செயல்பாடுகளை அளவிட உதவும் கை கடிகாரத்தை ஒன்பிளஸ் அறிமுகம் செய்துள்ளது.
1.39 அங்குல AMOLED திரை கொண்ட இந்த வாட்ச், நடத்தல், மெதுவாக ஓடுதல் (ஜாகிங்), ஓடுதல், மாரத்தான், உள்ளரங்க சைக்கிள் ஓட்டுதல், வெளிப்புற சைக்கிள் ஓட்டுதல், நீச்சல் உள்ளிட்ட 110 உடற்பயிற்சிகளை அளவிடக்கூடியது.
ஒன்பிளஸ் ஹெல்த் செயலியின் உதவியால் செயல்படும் ஒன்பிளஸ் வாட்ச்சின் மின்கலம் 14 நாள்கள் மின்னாற்றல் கொண்டிருக்கும். ஆண்ட்ராய்டு 6.0க்கு மேலான இயங்குதளங்களில் செயல்படும். ஐபோன்களில் இயங்காது.
ஏப்ரல் 22ம் தேதி நண்பகல் 12 மணி முதல் விற்பனை ஆரம்பமாகும். ஒன்பிளஸ்.இன், அமேசான்.இன், ஃபிளிப்கார்ட்.காம் இணைய தளங்களிலும் தெரிவு செய்யப்பட்ட கடைகளிலும் கிடைக்கும். இதன் அறிமுக விலை ரூ.14,999/- ஆகும்.