மகாராஷ்டிராவில் 144 தடை உத்தரவு அமல்
இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. தமிழகம், மகாராஷ்டிரா, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் வைரஸ் பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனை கட்டுப்படுத்த அந்தந்த மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இருப்பினும், கொரோனா பாதிப்பு குறைந்தபாடில்லை. கொரோனாவல் அதிகம் பாதிக்கப்பட்ட மாநிலமாக மகாராஷ்டிரா திகழ்கிறது. அங்கு 30 லட்சத்துக்கும் மேற்பட்டோர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட நிலையில், 58 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்துள்ளனர்.
மகாராஷ்டிராவில் கொரோனாவை கட்டுப்படுத்த சுகாதாரத்துறை அதிகாரிகளுடன் அம்மாநில முதலமைச்சர் உத்தவ் தாக்கரே ஆலோசனை நடத்தினர்.
ஆலோசனைக்கு பின் டுவிட்டர் பக்கம் மூலம் மாநில மக்களுக்கு அவர் அரசு எடுக்கவிருக்கும் முடிவுகளை அறிவித்தார்.
"தற்போது மாநிலத்தில் 523 பரிசோதனை நிலையங்கள் உள்ளன. 4,000 கோவிட் மருத்துவ நிலையங்கள் உள்ளன. மாநிலத்தில் 3.5 லட்சம் படுக்கை வசதிகள் உள்ளன. அவை அனைத்தும் தற்போது நோயாளிகளால் நிரம்பி வழிகின்றன. மாநிலத்தில் தினமும் 1,200 மெட்ரிக் டன் ஆக்சிஜன் உற்பத்தி செய்யப்படுகிறது. அதில் அன்றாட ஆக்சிஜன் பயன்பாடு 850 முதல் 900 மெட்ரிக் டன் வரை உள்ளது. எனவே, மாநிலத்தின் தேவையை பூர்த்தி செய்ய மற்ற மாநிலங்களில் இருந்து ஆக்சிஜனை வரவழைக்க மத்திய அரசு அனுமதிக்க வேண்டும்."
"கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது, தற்போது வைரஸ் தடுப்பு நடவடிக்கையில் நல்ல முன்னேற்றம் உள்ளது. ஆனாலும், கொரோனா வைரஸ் பரவல் குறைந்தபாடில்லை என்பதால் முழு பொது முடக்கத்தை அமல்படுத்தும் நிலைக்கு மாநிலம் தள்ளப்பட்டுள்ளது," என்று உத்தவ் தாக்கரே பேசினார்.
மாநிலம் முழுவதும் ஏப்ரல் 14 முதல் 15 நாட்களுக்கு பொது இடங்களில் 144 உத்தரவு பிறப்பிக்கப்படுவதாக அறிவித்தார்.
முதலமைச்சர் உத்தவ் தாக்கரே அறிவிப்பின் படி 144 தடை உத்தரவு அமலுக்கு வந்துள்ளது.