ரூ.10 லட்சத்திற்காக தொழிலதிபரிடம் சிறுமியை விற்பனை செய்த தாய்
சேலத்தில் 10 லட்சம் ரூபாய்க்காக 7 வயது சிறுமியை விற்பனை செய்த தாய், தொழிலதிபர் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர்.
சேலம் டவுன் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மூதாட்டி ஒருவர் தனது பேத்தியை தொழிலதிபர் ஒருவரிடம் பெற்றோரே விற்பனை செய்ததாகப் புகார் அளித்திருந்தார்.
அந்த புகாரில், “எனது மகள் தொழிலதிபர் ஒருவர் வீட்டில் வேலை பார்த்து வருகிறார். பணத்திற்காக எனது மகள் 7 வயதேயான அவரின் மகளை தொழிலதிபரிடம் கொடுத்துவிட்டார். உடனடியாக எனது பேத்தியை மீட்டு ஒப்படைக்க வேண்டும்”. எனக் கூறியிருந்தார்.
காவல்துறையினர் மூலம் தகவல் அறிந்த சைல்டு லைன் அமைப்பு 7 வயதுச் சிறுமியை மீட்டு, அரசு காப்பகத்தில் ஒப்படைத்தனர்.
சிறுமியின் தாய், உறவினர் பெண்ணுடன் பேசும் ஆடியோ, வாட்ஸ் அப் மூலம் வைரலானது. அதில், மகளை ரூ.10 லட்சத்துக்கு விற்பனை செய்துவிட்டேன், எனது மகளை அவர் நன்றாகப் பார்த்துக் கொள்வார் என்ற உரையாடல் பதிவாகியிருந்தது.
சிறுமியை 10 லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்த வழக்கில், தொழிலதிபர், சிறுமியின் தாய், தந்தை ஆகிய மூவரையும் டவுன் அனைத்து மகளிர் போலீஸார் கைது செய்தனர். குழந்தைகள் பாதுகாப்பு அலுவலர்கள் சிறுமியின் பெற்றோர், தொழிலதிபர் ஆகியோரிடம் சிறுமி பாலியல் ரீதியான துன்புறுத்தப்பட்டாரா என்பது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பாகத் மூன்று பேர் மீதும் மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.