தமிழகத்தில் ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவு

தமிழ்நாட்டில் சட்டப்பேரவைத் தேர்தல் ஒரே கட்டமாக கடந்த 6 ஆம் தேதி நடைபெற்றது. அன்றைய தினம், வேளச்சேரி - தரமணி சாலையில் மூன்று பேர் இரண்டு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களை இரு சக்கர வாகனங்களில் கொண்டு செல்வதை பார்த்த பொதுமக்கள் அவர்களை பிடித்து விசாரித்தனர். அப்போது, அவர்கள் தேர்தல் பணியில் உள்ள சென்னை மாநகராட்சி ஊழியர்கள் என்பதும் தெரிய வந்தது.

பெரும் சர்ச்சையை ஏற்படுத்திய இந்த சம்பவம் குறித்து செய்தியாளர்களை சந்தித்த தலைமைத் தேர்தல் அதிகாரி சத்தியபிரதா சாஹூ, இருசக்கர வாகனத்தில் எடுத்து செல்லப்பட்ட இயந்திரம், வேளச்சேரி டி.ஏ.வி பள்ளியில் 92ஆம் எண் கொண்ட வாக்குச்சாவடியில் பயன்படுத்தப்பட்டது என தெரிவித்தார். 50 நிமிடங்கள் அவை பயன்படுத்தப்பட்ட பிறகு பிரச்னை ஏற்பட்டதால், அவை மாற்றப்பட்டதாகவும், அதில் 15 வாக்குகள் பதிவாகியிருந்ததாகவும் அவர் கூறினார்.

இந்நிலையில் அந்த வாக்குச் சாவடியில் மட்டும் மறு வாக்குப்பதிவு நடத்த இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. மறு தேர்தல் வரும் சனிக்கிழமை காலை 7 முதல் இரவு 7 மணிவரை நடைபெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வேளச்சேரி தொகுதியில் அதிமுக சார்பில் எம்.கே. அசோக்கும், திமுக கூட்டணி சார்பில் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜே.எம்.எச். ஹசனும் போட்டியிடுகின்றனர் .

540 வாக்குகள் கொண்ட அந்த வாக்குச்சாவடியில், 220 வாக்குகள் மட்டுமே பதிவாகியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

More News >>