வலி மிகுந்தது தனுஷ் நடிப்பு கர்ணன் - கார்த்திக் சுப்புராஜ் பாராட்டு!
கர்ணன் படம் பார்த்துவிட்டு தனுஷின் நடிப்பை நடிப்பு கர்ணன் என்று பாராட்டியிருக்கிறார் இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ்.
தனுஷ் நடிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியாகியுள்ள கர்ணன் படம் வசூலில் சாதனைகளை நிகழ்த்தி வருவதோடு கலவையான விமர்சனங்களையும் பெற்று வருகிறது. படத்தைப் பார்த்த விஜய் சேதுபதி கர்ணன் அருமையான படம் என்று பாராட்டியிருந்தார். அதேபோல இயக்குநர் ராஜு முருகன் “ கர்ணன் நமக்கான படம். இந்த மண்ணின் கதை. எம் மக்களின் வதை. அதை தரமான, அறமான சினிமாவாக்கியிருக்கும் தோழன் மாரி செல்வராஜுக்கு இன்னொருமுறை இதயத்தின் முத்தங்கள்” என்று பாராட்டினார்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ஜோதிமணி எம்.பி “கர்ணன் ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்வை, நியாயத்தை,வலியை, எதிர்வினையைப் பேசும் ஒரு வலிமையான படம். நெஞ்சை உலுக்கும் காட்சிகளும்,குறியீடுகளும் நிறைய. சாதி எங்கிருக்கிறது என்று கேட்பவர்களை எங்கில்லை? என்று பொட்டில் அடிக்கும் படம். பாராட்டுகள் மாரி செல்வராஜ்” என்று பாராட்டியிருந்தார்.
தயாரிப்பாளர் தனஞ்செயன்: ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கையைப் பற்றிய மிகச் சிறந்த, நம்பகமான காட்சிப்படுத்தல் 'கர்ணன்'. மாரி செல்வராஜின் சிறப்பான இயக்கம் தமிழ் சினிமாவின் தரத்தை உயர்த்தியுள்ளது. இப்படத்தை மிக உயரத்துக்கு எடுத்துச் சென்ற தனுஷுக்கும் படக்குழுவினருக்கும் வாழ்த்துகள்.
அர்ச்சனா கல்பாத்தி: நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு படத்தைப் பற்றிப் பேச எனக்கு வார்த்தைகள் கிடைக்கவில்லை. இந்த அற்புதமான படத்தைத் திரைக்குக் கொண்டு வந்த தாணுவுக்கு நன்றி.
பி.சி.ஸ்ரீராம்: ஹைதரபாத்திலிருந்து கர்ணனின் சத்தத்தை என்னால் கேட்க முடிகிறது. என் மனதில் வலியை உணரச் செய்த உங்களின் முதல் படம் இது. அடுத்த உண்மை என் மீது படரக் காத்திருக்கிறேன். அடுத்த உண்மைக்காகக் காத்திருப்பது மிகுந்த தொந்தரவு செய்யக்கூடியதாக இருக்கிறது.
ஆதவ் கண்ணதாசன்: 'கர்ணன்' சக்திவாய்ந்த மற்றும் முகத்தில் அறையும் திரைப்படம். தனது ஒவ்வொரு படத்திலும் தனுஷ் முத்திரை பதிக்கிறார். மாரி செல்வராஜ் அண்ணனுக்கு சல்யூட். படம் ஏற்படுத்திய தாக்கத்திலிருந்து இன்னும் மீள இயலவில்லை. 'கர்ணன்' கொண்டாடப்படவேண்டிய படம்.
இந்நிலையில், இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது ட்விட்டர் பக்கத்தில் “கர்ணன் படத்தின் உண்மை தன்மை வலிமிகுந்ததாக இருந்தது. தனுஷ் இன்னும் எவ்வளவு திறமைகளை தன்னுள் சேர்த்து வைத்திருக்கிறாரோ? நடிப்பு கர்ணா ” என்று தனுஷின் நடிப்பையும் மொத்தப் படக்குழுவையும் வாழ்த்தி பாராட்டி இருக்கிறார்.