மத்திய அரசுக்கே இது சரியா... எதேச்சதிகாரப்போக்குடன் இருக்கிறதா பாஜக?!

கொரோனா தடுப்பூசி போடுவதில் விழிப்புணர்வு கடந்த இரு வாரங்களாக அதிகரித்துவரும் சூழலில், இந்தியாவில் தடுப்பூசி பற்றாக்குறையாக இருக்கும் புகார், பரவலாகப் பல மாநிலங்களிலிருந்தும் எழுப்பப்படுகின்றன. இரண்டு தடுப்பூசிகளையும் மத்திய அரசுதான் மாநில அரசுகளுக்குப் பகிர்ந்தளிக்கும் பணியைச் செய்கிறது. இதில் மாநிலத்துக்கு மாநிலம் பாரபட்சமாக நடப்பதாகக் குற்றம்சாட்டப்படுகிறது. இதுகுறித்து ராகுல் காந்தி, பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார்.

அக்கடிதத்தில், தடுப்பூசி போடப்படுவது மந்த கதியில் இருக்கிறது என்றும், துரிதப்படுத்தாவிட்டால் பேரழிவு ஏற்படக்கூடும் என்றும் மத்திய அரசை எச்சரித்துள்ளார். மேலும், நமக்கே பற்றாக்குறையாக இருக்கும் சூழலில் வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்வதை நிறுத்தவேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளார். இவரது கருத்துக்கு வழக்கம்போல மத்திய அமைச்சர்கள், ராகுல் காந்தியைக் கிண்டலடித்து மறுப்பு தெரிவித்துள்ளனர்.

கடந்த ஆண்டிலும் சீனாவில் கொரோனா பரவல் தொடங்கியபோதே இதே ராகுல் காந்திதான் எச்சரித்தார். கொரோனா தொற்று அபாயகரமானதாக இருக்குமென்றும், அதுகுறித்து அசட்டையாக இருக்காமல் இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு விமானப்போக்குவரத்தைத் தடைசெய்ய வேண்டுமென்று எச்சரித்தார். அப்போதும் அவரை மத்திய அமைச்சர்கள் கிண்டலடித்தார்கள். ஆனால் நடந்த வரலாறு என்ன போதிக்கிறது? ராகுல் காந்தி எச்சரித்தது சரியென்றே உணர்த்தியுள்ளது.

இங்கே ராகுல் காந்தி சொல்வதெல்லாம் சரியாக நடக்கிறதென்பது வாதமல்ல, ஒரு எதிர்க்கட்சித் தலைவராக அவர் கூறும் கருத்துக்களை ஒட்டுமொத்தமாகப் புறந்தள்ளும் எதேச்சதிகாரப்போக்கு, இந்தியா போன்ற மிகப்பெரிய மக்கள் தொகை கொண்ட நாட்டை ஆளும் அரசுக்கு உகந்ததல்ல. இவர்களின் எதேச்சதிகாரச் செயல்பாடுகளால் மக்கள்தான் பாதிக்கப்படுகிறார்கள். எவர் எச்சரிக்கை கொடுத்தாலும் அதனைச் சீர்தூக்கிப்பார்த்து தங்களைச் சரிப்படுத்திக்கொள்வதே மக்களாட்சிக்கு அழகு.

எனவே கொரோனா இரண்டாம் அலை இந்தியாவில் அதிகரித்து வரும் நிலையில் மாநிலத்துக்கு மாநிலம் பாரபட்சமாக நடந்துகொள்ளாமல் தடுப்பு நடவடிக்கைளை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பு!

More News >>