கோலியின் 1258 நாட்கள் சாதனையை 8 எண்களில் முறியடித்த பாபர் ஆசம்!
நீண்ட நாட்களுக்குப் பின் பாகிஸ்தான் மண்ணிலிருந்து வந்திருக்கும் உலகத்தர பேட்ஸ்மேன் பாபர் ஆசம். டி வில்லியர்சை ஆதர்ச நாயகனாகக் கொண்டு, தன் கிரிக்கெட் பயணத்தைத் தொடங்கிய பாபர், இப்போது டி வில்லியர்ஸை போலவே, 'வில்லோ வீல்டிங்', ஸ்ட்ரெயிட் டிரைவ் என தனக்கு வாய்ப்பு கிடைக்கும் ஒவ்வொரு போட்டிகளிலும் முத்திரை பதித்து வருகிறார். டெஸ்ட் என்றாலும், ஒருநாள் போட்டிகள் என்றாலும் அவரின் திறமையை வெளிப்படுத்தி வருகிறார். இதற்கு தற்போது பலன் கிடைத்துள்ளது.
ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் பாபர் ஆசம் தற்போது முதலிடம் பிடித்துள்ளார். இவர் யாரை வீழ்த்தி இந்த இடத்தை பிடித்திருக்கிறார் தெரியுமா... இந்திய அணியின் தலைசிறந்த வீரரும், கேப்டனுமான விராட் கோலியை வீழ்த்தி தான் முதலிடத்தை பிடித்திருக்கிறார். கோலியை 8 புள்ளிகள் கூடுதலாக பெற்று இந்த சாதனையை நிகழ்த்தி இருக்கிறார் பாபர். இதன்மூலம் 1258 நாட்கள் ஐசிசி ஒருநாள் போட்டிகள் தரவரிசையில் முதலிடத்தில் இருந்த கோலி தற்போது இரண்டாம் இடம் வந்துள்ளார்.
ஒருமுறை இங்கிலாந்து - பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான மான்செஸ்டர் டெஸ்ட் போட்டியின்போது இங்கிலாந்து அணியின் முன்னாள் கேப்டன் நாசர் ஹுசைன், பாகிஸ்தான் வீரர் பாபர் ஆசமின் ஆட்டத்தைப் பார்த்து ``இன்றைய போட்டியில் பாபர் ஆசமுக்கு பதிலாக இந்திய கேப்டன் கோலி விளையாடி இருந்தால் அனைவரும் பேசி இருப்பார்கள். பாபர் ஆசம் என்பதால் ஒருவரும் பேசவில்லை. பாபர் ஆசம், இளம் வீரர்; சிறப்பாக ஆடுகிறார். கோலி, ஸ்மித், வில்லியம்சன் மற்றும் ரூட் ஆகியோருக்கு அடுத்ததாக ஐந்தாவதாக பாபர் ஆசம் கிரிக்கெட் உலகை ஆள இருக்கிறார்" எனக் குறிப்பிட்டார்.
அவர் சொன்னது பழித்துவிட்டது. கிரிக்கெட் உலகை ஆள மெல்ல மெல்ல வந்துகொண்டிருக்கிறார் பாபர் ஆசம்.