உதயநிதி சுட்டிக்காட்டிய தவறு.. மாற்றிய கர்ணன் படக்குழு!

தனுஷ் நடிப்பில் வெளியான கர்ணன் படம் 1995ல் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைக்கப்பட்டு எடுக்கப்பட்ட நிலையில், படத்தில் 1997 என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இது சலசலப்பை ஏற்படுத்தியது. காரணம் 1995ல் அதிமுக ஆட்சியும், 1997ல் திமுக ஆட்சியும் நடந்திருந்தது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து இது தொடர்பாக திமுக இளைஞரணி தலைவர் உதயநிதி ஸ்டாலின் ஒரு ட்வீட் பதிவிட்டு இருந்தார்.

அதில், ``கர்ணன் பார்த்தேன். ஒடுக்கப்பட்ட மக்களின் வலியையும், மறுக்கப்பட்ட அவர்களின் உரிமையையும் மிகைப்படுத்துதல் இன்றி எடுக்கப்பட்டுள்ள இப்படம் கொண்டாடப்பட வேண்டியது. நண்பர் தனுஷ், அண்ணன் கலைப்புலி தாணு, இயக்குநர் மாரி செல்வராஜ் மூவரிடமும் பேசி அன்பையும் வாழ்த்தையும் தெரிவித்தேன்.

1995 அதிமுக ஆட்சியில் நடந்த கொடியன்குளம் கலவரத்தை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ள இப்படத்தில் அச்சம்பவம் 1997ல் கழக ஆட்சியில் நடந்ததாக காட்டப்பட்டுள்ளது. இதனை தயாரிப்பாளர், இயக்குநரிடம் சுட்டிக்காட்டினேன். அந்தத் தவறை இரு தினங்களில் சரிசெய்துவிடுகிறோம் என உறுதியளித்தனர். நன்றி" என்று குறிப்பிட்டு இருந்தார்.

இதற்கிடையே, உதயநிதியின் வேண்டுகோள்படியே இப்போது படத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. 1997 என்று குறிப்பிட்டதற்கு பதிலாக 1990 பிற்பகுதி என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இதனை திமுகவினர் தற்போது வரவேற்று வருகின்றனர்.

More News >>