திடீரென உடல் எடை கூடுகிறதா? காரணங்களை தெரிந்துகொள்ளுங்கள்!
சிலருக்கு ஒரேநாள் இரவில் உடல் எடை கூடிவிட்டது போன்ற உணர்வு ஏற்படும். உண்மைதான்! சில காரணங்களால் உடல் எடை விரைவாக கூடலாம். நம் உடலில் 7000 கலோரி செலவழிக்கப்படாமல் அல்லது எரிக்கப்படாமல் இருந்தால் உடல் எடை 1 கிலோ அதிகரிக்கும். மது
முந்திய நாள் இரவு அதிகம் மது அருந்தியிருந்தால் அல்லது முந்தின நாள் போதுமான நீர் அருந்தாமல் இருந்தால் மறுநாள் உடல் எடையில் மாற்றம் தென்படும். போதுமான நீர் அருந்தாவிட்டாலும், மது அருந்தினாலும் உடல் நீரை வெளியேற்றாமல் தக்க வைத்துக்கொள்ளும். உடலில் நீர் சேர்வதால் உடல் எடை அதிகரிக்கிறது.
உறக்கம்
போதுமான நேரம் உறங்காதது மற்றும் ஆழ்ந்து உறங்காதது இவை இரண்டுமே உடல் எடை அதிகரிக்க காரணமாகின்றன. குறைந்த நேரம் உறங்கினால், மறுநாள் அதிகமாக அளவு உண்ணும்படி நேரக்கூடும். வழக்கத்திற்கு மாறாக அதிக அளவு சாப்பிடும்போது, உடலின் நேர ஒத்திசைவு செயல்பாடு பாதிப்புக்குள்ளாகிறது.
மன அழுத்தம்
முந்தின நாள் உணர்ச்சிரீதியான அழுத்தத்திற்கு உள்ளாகியிருப்போரின் எடை மறுநாள் அதிகரிக்க வாய்ப்புண்டு. மன அழுத்தம் அதிகமாகும்போது உடலில் கொழுப்பை சேர்க்கும் கொர்டிசோல் என்ற ஹார்மோனின் உற்பத்தி உயருகிறது. இதன் காரணமாக உடலில் கொழுப்பு படிகிறது.
மாதவிடாய்
மாதவிடாய் வரப்போகும் நாள்களில் மாதவிடாய்க்கு முந்தைய உபாதையின் (premenstrual syndrome)காரணமாக பெண்களுக்கு உடலில் நீரின் அளவு அதிகரித்து எடையும் உயருகிறது.
மருந்து
புதிதாக ஏதாவது மருந்து அல்லது மாத்திரை சாப்பிட தொடங்கியிருந்தாலும் உடல் எடை அதிகரிக்கும். மருந்து சாப்பிடுவதால் பசி அதிகமாகிறது; சாப்பாடும் பெருகுகிறது. இது வளர்சிதை மாற்ற வேகத்தை குறைக்கிறது.
இரவு உணவு
இரவு நெடுநேரம் கழித்து உணவு சாப்பிட்டாலும் உடல் எடை திடீரென உயரும். சாப்பிடவேண்டிய உணவை நேரந்தவறி உண்டால் அது செலவழிக்கப்படுவதற்குப் பதிலாக சேமித்து வைக்கப்படும். இதுவே உடல் எடை உயர காரணமாகும்.