`மனித மாண்பை மீட்டெடுப்போம்!- ஒன்றிணைய அழைக்கும் பா.இரஞ்சித் !
வன்கொடுமை தடுப்புச் சட்டத் திருத்தத்துக்கு எதிராக இன்று ஆளுநர் மாளிகை முற்றுகையிடும் போராட்டத்துக்கு இயக்குநர் பா.இரஞ்சித் அழைப்பு விடுத்துள்ளார்.
`எஸ்.சி/எஸ்.டி வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் அரசு அதிகாரிகள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டால் அவர்களை உடனடியாகக் கைது செய்யக் கூடாது. மேலும், அரசு அதிகாரிகளைக் கைது செய்யும் முன் டி.எஸ்.பி அந்தஸ்துக்குக் குறைவில்லாத காவல்துறை அதிகாரி, முறையாக வழக்கை விசாரிக்க வேண்டும்.
அரசு அதிகாரிகளைக் கைது செய்வதற்கு முன் ஆணையத்திடம் முறையான முன் அனுமதி பெற்றே கைது செய்ய வேண்டும்’ என்று உச்ச நீதிமன்றம் கடந்த மாதம் தீர்ப்பு அளித்திருந்தது. இந்தத் தீர்ப்பை எதிர்த்து வடமாநிலங்களின் பல பகுதிகளில் போராட்டங்கள், கலவரங்கள், வன்முறைகள் போன்றவை நடைபெற்றன.
தமிழ்நாட்டிலும் பல போராட்டங்கள் ஆங்காங்கே நடந்து வருகின்றன. இந்நிலையில் இன்று சென்னையில் பல அரசியல் கட்சிகள் மற்றும் அமைப்புகள் ஒன்று சேர்ந்து இந்த சட்டத் திருத்தத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து ஆளுநர் மாளிகையை முற்றுகையிடப் போகின்றனர்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் இயக்குநர் பா.இரஞ்சித், `வன்கொடுமை தடுப்பு சட்ட திருத்தம் என்பது எஸ்.சி/எஸ்.டி பட்டியலின மக்களின் குரலை நசுக்கும் மிகப்பெரிய வன்கொடுமை. எளிய மக்களின் சட்ட உரிமையை காக்க சாதி, மத, எதிர்ப்பு முற்போக்கு எண்ணம் கொண்ட அனைவரும் திரள்வோம் மனித மாண்பை மீட்டெடுக்க! ஜெய்பீம்!’ என்று பதிவிட்டு அழைப்பு விடுத்துள்ளார்.