நான் அவர்களை சும்மா விடமாட்டேன் - மம்தா ஆவேசம்!

மேற்கு வங்காளத்தில் பாதுகாப்புபடையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என அம்மாநில முதலமைச்சர் மம்தா பானர்ஜி உறுதியளித்துள்ளார்.

மேற்கு வங்காளத்தில் 8 கட்டங்களாக சட்டப்போரவை தேர்தல் நடந்து வருகிறது. இதில் கடந்த 10 ஆம் தேதி நடந்த 4 வது கட்ட வாக்குப்பதிவின்போது கூச்பெஹார் மாவட்டத்தின் சிட்டால்குச்சியில் வன்முறை வெடித்தது. வாக்குச்சாவடி ஒன்றில் நடந்த வன்முறையில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கிச்சூடு நடத்தினர். இதில் 4 பேர் உயிரிழந்தனர். மத்திய பாதுகாப்பு படை வீரர்களை முற்றுகையிட்டு, அவர்களது துப்பாக்கியை பறிக்க முயன்றதால் தற்காப்புக்காக இந்த துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதாக போலீசார் கூறியுள்ளனர்.

இதைப்போல சிட்டால்குச்சியில் மற்றொரு வாக்குச்சாவடியில் பாஜக தொண்டரான ஆனந்த பர்மன் என்பவர் மர்ம நபர்களால் சுட்டுக்கொல்லப்பட்டார். இதன் பின்னணியில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியினர் இருப்பதாக பாஜக குற்றம் சாட்டியுள்ளது.இந்த சம்பவங்களால் கூச்பெஹார் மாவட்டத்தில் பெரும் பரபரப்பும், பதற்றமும் நிலவியது. எனவே மாவட்டத்துக்குள் அரசியல் கட்சியினர் நுழைய தேர்தல் ஆணையம் 72 மணி நேர தடை விதித்தது.

பாதுகாப்பு படையினர் நடத்திய துப்பாக்கிச்சூடு மற்றும் 72 மணி நேர தடை சம்பவங்களுக்கு மாநில முதலமைச்சரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி கடும் கண்டனம் தெரிவித்து இருந்தார். கூச்பெஹார் மாவட்டத்துக்குள் நுழைய தேர்தல் ஆணையம் விதித்த தடைக்காலம் முடிவடைந்ததை தொடர்ந்து அவர் துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் வீடுகளுக்கு நேரில் சென்று, குடும்பத்தினருக்கு ஆறுதல் தெரிவித்தார்.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், வாக்குச்சாவடியில் பாதுகாப்புபடையினர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் உயிரிழந்தது குறித்து விசாரணை நடத்தப்படும் என தெரிவித்தார்.

More News >>