கோவில் விழாவில் சிபிஎம் சிறுவனை கொன்ற ஆர்எஸ்எஸ் தொண்டர்கள்!

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டத்தில் கோவில் திருவிழாவின் சிபிஎம் மாணவர் பிரிவைச் சேர்ந்த 15 வயது சிறுவனை கொன்றது ஆர்எஸ்எஸ் தொண்டர்கள் என சிபிஎம் குற்றம்சாட்டியுள்ளது.

கேரள மாநிலம் ஆலப்புழா மாவட்டம் வன்னி கொன்னு பகுதியை சேர்ந்தவர் அம்பிலிகுமார். இவரது மகன் அபிமன்யூ. இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வந்தார். அந்த பகுதியில் உள்ள பகவதி அம்மன் கோவிலில் திருவிழா நடைபெற்றது. திருவிழாவில் கலந்து கொள்வதற்காக அபிமன்யூ கோவிலுக்கு சென்றார். அங்கு சாமியை தரிசனம் செய்து விட்டு தனது நண்பர்களுடன் அங்கு சுற்றி திரிந்து கொண்டிருந்தார். அப்போது அங்கு 4 பேர் கொண்ட கும்பல் வந்தது.

அவர்கள் அபிமன்யூவின் அருகில் சென்று திடீரென அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அவர்களுக்குள் வாக்குவாதம் முற்றவே ஆத்திரம் அடைந்த மர்மநபர்கள் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து அபிமன்யூவின் வயிற்று பகுதியில் குத்தி விட்டு அங்கிருந்து தப்பியோடி விட்டனர். இதில் அபிமன்யூ பரிதாபமாக உயிரிழந்தார்.

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஆலப்புழா போலீசார் விரைந்து வந்து சிறுவனின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

போலீசாரின் முதற்கட்ட விசாரணையில் அபிமன்யூக்கும், அதே பகுதியை சேர்ந்த சில நபர்களுக்கும் இடையே கடந்த வாரம் அந்த பகுதியில் நடந்த மற்றொரு கோவில் திருவிழாவின்போது தகராறு மூலம் ஏற்பட்ட முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததும் தெரியவந்தது.

வள்ளிக்கொன்னுவில் உள்ள உள்ளூர் சிபிஎம் மாணவர் பிரிவைச் சேர்ந்த சிறுவனின் மரணம் ஒரு அரசியல் கொலை என்று குற்றம் சாட்டி உள்ளது. அபிமன்யுவின் கொலையில் ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஈடுபட்டதாக கட்சி குற்றம் சாட்டியுள்ளது. சிபிஐ (எம்) வியாழக்கிழமை வள்ளிக்கொன்னுவில் கடையடைப்பை அறிவித்துள்ளது.

More News >>