அனுமார் எங்கு பிறந்தார்?... ஆந்திரா - கர்நாடக இடையே வாய்க்கால் சண்டை!
உத்திரப்பிரதேச மாநிலம் அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது. இதற்காக நாடு முழுவதும் நன்கொடை வசூலிக்கப்பட்டு வருகிறது. தற்போத வரை ரூ.1500 கோடிக்கும் மேலான நன்கொடை வசூலாகியுள்ளது. இதற்கிடையே, அயோத்தியில் கட்டப்படும் ராமர் கோயிலுக்கு நன்கொடை வசூலிக்கும் விவகாரத்தில் கர்நாடக மாநில அரசியலில் சர்ச்சைக்குரிய விவாதமாக மாறியது. இந்த நிலையில் தற்போது ஆந்திரா மற்றும் கர்நாடக மாநிலங்களுக்கு இடையே புதிய சண்டை ஒன்று உருவாகியுள்ளது.
அது அனுமன் பிறப்பிடம் தொடர்பாக எழுந்துள்ள மோதல். வடக்கு கர்நாடகாவின் ஹம்பிக்கு அருகிலுள்ள கிஷ்கிண்டாவில் உள்ள அஞ்சயநாத்ரி மலையில் ஹனுமன் பிறந்தார் என்று கர்நாடகா போர்க்கொடி தூக்கியுள்ளது. இதேபோல் ஆந்திராவோ,திருப்பதி திருமலையின் ஏழு மலைகளில் உள்ள அஞ்சநாத்ரியை ஹனுமன் பிறந்த இடமாக கூறுகிறது. அனுமனின் பிறப்பிடத்தை உறுதிப்படுத்த ஆந்திரா, திருமலை திருப்பதி தேவஸ்தானம் தலைமையில் குழு ஒன்றை அமைத்துள்ளது. இதேபோல் கர்நாடகாவோ, அஞ்சயநாத்ரி மலையை ஒரு மத சுற்றுலா மையமாக மாற்றும் திட்டத்தைத் தொடங்கி இருக்கிறது.
இந்த இரண்டு அரசுகள் சண்டைகளுக்கு மத்தியில் கர்நாடகாவின் சிவமோகா மாவட்டத்தில் உள்ள ராமச்சந்திரபுரா மடத்தின் மடாதிபதி, ராகவேஸ்வர பாரதி கர்நாடகாவின் கோகர்ணாவின் கட்லே கடற்கரையில் தான் உண்மையான ஹனுமன் பிறப்பிடம் இருப்பதாகவும், வால்மீகி ராமாயணத்தில் இது குறிப்பிடப்பட்டுள்ளது என்றும், இங்கு விரைவில் அனுமன் கோயிலை மேம்படுத்த திட்டமிட்டுள்ளோம் என்று கூறியுள்ளார்.