மருத்துவமனையின் ஊழியரின் ஒத்துழைப்புடன் கொரோனா தடுப்பூசி திருட்டு?
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள மருத்துவமனையில் இருந்து 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை தீவிரமடைந்துள்து. கொரோனா தொற்று பாதிப்புகள் நாள்தோறும் 1,50,000-ஐ கடந்து உச்சம் தொட்டு வருகின்றன. ராஜஸ்தான் மாநிலத்திலும் கொரோனா தொற்று வேகமெடுத்துள்ளது. ராஜஸ்தானில் செவ்வாய்க்கிழமை மட்டும் 5528 புதிய கொரோனா வைரஸ் பாதிப்புகள் கண்டறியப்பட்டுள்ளன. ஜெய்ப்பூரில் தொற்றின் தாக்கம் அதிகமாக உள்ளது.
இந்நிலையில் ஜெய்ப்பூரின் சாஸ்திரி நகர் பகுதியில் உள்ள கன்வதியா மருத்துவமனையில் இருந்து பாரத் பயோடெக்கின் உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட 320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கன்வதியா அரசு மருத்துவமனையின் குளிர் சேமிப்பு கிடங்கிலிருந்து இந்த தடுப்பூசிகள் காணாமல் போயுள்ளன. மருத்துவமனை நிர்வாகம் இந்த 320 டோஸ்களை தேடியபோதுதான் அவற்றினை காணவில்லை என்று தெரியவந்தது.
320 டோஸ் கோவாக்சின் தடுப்பூசிகள் காணாமல் போனது குறித்து மருத்துவமனை நிர்வாகம் அளித்த புகாரின் பேரில் காவல்நிலையத்தில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சிசிடிவி கேமரா மட்டுமே வேலை செய்யாத இடத்திலிருந்து இந்த தடுப்பூசி திருடப்பட்டுள்ளதால் காவல்துறையினர் பல கோணத்தில் விசாரணை நடத்தி வருகின்றனர். மருத்துவமனையின் ஊழியரின் ஒத்துழைப்புடன் இந்த திருட்டு சம்பவம் நடந்துள்ளதா என்ற சந்தேகத்தில் மருத்துவமனை ஊழியர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.