நாளை பலப்பரீட்சை பஞ்சாப் வெர்ஸஸ் சென்னை – வெற்றி யாருக்கு?
நடப்பு ஐபிஎல் தொடரில் பஞ்சாப் கிங்ஸ் அணியுடன் நாளை மோதுகிறது சிஎஸ்கே. இரு அணிகளும் 24 முறை நேருக்குநேர் மோதியதில் சிஎஸ்கே 15 முறை வென்று அதிக்கம் செலுத்தியுள்ளது.
முதல்போட்டியில் சிஎஸ்கே தோல்வியை தழுவியது. கடந்த ப்ளேயிங் 11னில், 11 பேரும் பேட்டிங் திறமை பெற்றவர்களாக இருந்தனர். கடந்த போட்டியில் டு பிளிஸ்சிஸ் ருத்து ராஜ் பெரிய அளவில் சோபிக்கவில்லை. 7 கோடி ரூபாய்க்கு எடுக்கப்பட்ட நான் ஜோடை போகமாட்டேன் என்பதுபோல் மொயீன் அலி 24 பந்தில் 36 ரன்கள் விளாசினார். ரெய்னா அணிக்கு பலம் சேர்த்தார். சுட்டிப் பையன் சாம் கர்ரன் 15 பந்தில் 34 ரன் விளாசி சிஎஸ்கே 188 ரன்கள் எட்ட உதவினார்.
இதனால் டோனியின் டக் அவுட் பெரிதாக தெரியவில்லை. ஆனால் பேட்டிங்கிற்கு சாதகமான வான்கடேயில் பிரித்வி ஷா, ஷிகர் தவன் சென்னை பந்து வீச்சை பஞ்சாக பறக்க விட்டனர். தீபக் சாஹர், கர்ரன், ஷர்துல் தாகூர், ஜடேஜா, மொயீன் அலி, பிராவோ என ஆறு பேர் பந்து வீசியும் பலனில்லை. பந்து வீச்சில் ரன்களை வாரி இறைத்தனர். சிஎஸ்கே அணியில் லுங்கி நிகிடி, பெரேண்டர்ஃப் உள்ளனர். இருவரும் பஞ்சாப் அணிக்கு எதிராக விளையாடமாட்டார்கள் என சிஎஸ்கே பயிற்சியாளர் பிளமிங் தெரிவித்துள்ளார். முதல் போட்டியில் திணறியது போன்ற நிலை ஏற்பட வாய்ப்புள்ளது. இதனால் தீபக் சாஹர், ஷர்துல் தாகூர் பந்தில் வேகத்தை கூட்டுவது அவசியம்.
பஞ்சாப் என்றாலே, ரசிகர்களின் நினைவுக்கு வருவது அதிரடிதான். அதற்கு காரணம் கேஎல் ராகுல், மயங்க் அகர்வால், கிறிஸ் கெயல், நிக்கோலஸ் பூரன் ஆகியோர்தான். தற்போது இவர்களுடன் தீபக் ஹூடா இணைந்துள்ளார்.
தீபக் ஹூடா ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கெதிரான முதல் ஆட்டத்தில் 28 பந்தில் 64 ரன்கள் குவித்தார். இதில் 6 சிக்சர்கள் அடங்கும். கேஎல் ராகுல் (91), கிறிஸ் கெய்ல் (40) ஆகியோரின் அதிரடி வழக்கம்போல் தொடர்கிறது. முதல் போட்டியிலேயே 200 ரன்களை கடந்து பிரமிக்க வைத்துள்ளது. சென்னை அணியின் பந்து வீச்சு இவர்களை கட்டுப்படுத்துமா? என்பதே கேள்வி. பஞ்சாப் அணியின் பந்து வீச்சில் குறை உள்ளதை மறுக்க இயலாது.
மொத்தத்தில் பஞ்சாப் பேட்டிங்கை சிஎஸ்கே பந்து வீச்சு எவ்வாறு கட்டுப்படுத்துகிறது என்பதை பொறுத்துதான் போட்டியில் வெற்றித் தோல்வி அமையும் என தெரிகிறது.