4 வருடங்களுக்குபிறகு மேக்ஸ்வெல்லின் எழுச்சி – ஹி இஸ் பேக்!
கடந்த 4 வருட ஐபிஎல் போட்டிகளில் மேக்ஸ்வெல் பெரிய அளவில் ஸ்கோர் செய்யவில்லை. இந்நிலையில் அந்த விமர்சனங்களுக்கு தனது பேட்டின் மூலம் பதிலடி கொடுத்துள்ளார் மேக்ஸ்வெல்.
ஆஸ்திரேலிய வீரர் மேக்ஸ்வெல் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிக்காக இந்த சீசனில் களமிறங்கியுள்ளார். 2017 ஐபிஎல் சீசனுக்கு பிறகு மேக்ஸ்வெலின் ஆட்டம் சொல்லிக்கொள்ளும்படி அமையவில்லை. இதன்காரணமாக பல்வேறு அணிகளுக்கு சுழற்சி முறையில் சென்று வந்தார். டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் என அணிகள் மாறினார்.
கடந்த 2020ம் ஆண்டு ஐபிஎல் போட்டியில் வெறும் 108 ரன்கள் மட்டுமே அடித்தார். இந்த சீசனில் ஆர்சிபி 14.25 கோடி ரூபாய்க்குமேக்ஸ்வெல்லை எடுத்தது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.
ஒருமுறை மேக்ஸ்வெல் குறித்து கம்பீர், ``மேக்ஸ்வெல் ஒழுங்காக ஆடியிருந்தால் ஏன் அவரை அணிகள் விடுவிக்கின்றன என கேள்வி எழுப்பி இருந்தார். நடப்பு ஐபிஎல் தொடரில் மும்பை இந்தியன்ஸ் அணிக்கு எதிரான முதலாவது ஆட்டத்தில் சேப்பாக்கம் மைதானத்தில் 100 மீட்டருக்கு ஒரு பிரம்மாண்ட சிக்ஸரை விளாசி மேக்ஸ்வெல் இஸ் பேக் என சொல்லாமல் சொன்னார்.
அந்த ஆட்டத்தில் அதிரடியாக ஆடிய மேக்ஸ்வெல் 39 ரன்களை எடுத்து ஆட்டமிழந்தார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான இன்றைய போட்டியில் கோலி 33 ரன்களில் ஆட்டமிழந்தார். டிவில்லியர்ஸ் 1 ரன்களில் அவுட்டாகி ஏமாற்றம் அளித்தார். ஹைதராபாத் பந்துவீச்சில் ஆர்.சி.பி வீரர்கள் ஒரு பக்கம் விக்கெட்டுகளை பறிக்கொடுக்க மேக்ஸ்வெல் தனிஆளாக போராடினார்.கடைசி பந்துவரை களத்தில் இருந்த மேக்ஸ்வெல் 59 ரன்கள் விளாசினார்.
இந்த ஐபிஎல் தொடரில் தனது முதல் அரைசதத்தை பதிவு செய்தார். 2016 ஆண்டுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் அரைசதம் அடித்துள்ளார். 4 வருடங்களுக்கு பிறகு ஐபிஎல் கிரிக்கெட்டில் மேக்ஸ்வெல் அரைசதம் விளாசியுள்ளார். இதன் மூலம் தன் மீதான விமர்சனங்களுக்கு அவர் பதிலடிகொடுத்து வருகிறார்.