சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி!
தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதி செய்யபட்டுள்ளது. அவர் சென்னையில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் கடுமையான உயர்ந்து வருகிறது. கடந்த 2 நாட்களாகவே 8ஆயிரத்தை நெருங்கியுள்ளது கொரோனா பாதிப்பு. கடந்த ஆண்டு வந்ததை விட, தற்போது பரவிவரும் கொரோனா 2ம் அலையின் பாதிப்பு உச்சத்தில் இருப்பதாக மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்நிலையில் சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகத்துக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. தமிழக சட்டம் மற்றும் நீதிமன்றங்கள், கனிமவளத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் நேற்று விழுப்புரம் வடக்கு மாவட்ட அதிமுக அலுவலகத்தில் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு, அவரது உருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார்.
இதையடுத்து திண்டிவனத்தில் உள்ள தன் வீட்டுக்குப் புறப்பட்டுச் சென்றார். இந்நிலையில் இன்று காலை கொரோனா தொற்றுக்கான அறிகுறி அவருக்கு தென்பட்டுள்ளது. இதன்காரணமாக திண்டிவனத்தில் உள்ள அரசு மருத்துவமனைக்குச் சென்று ஸ்வாப் பரிசோதனை செய்து கொண்டார். பரிசோதனைக்கான முடிவுகள் இன்று மாலை அவருக்கு அனுப்பி வைக்கப்பட்டன.
அதன்படி, அமைச்சர் சி.விசண்முகத்துக்கு கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது. இதையடுத்து அவர் சென்னை, நுங்கம்பாக்கத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். மேலும் அவருடன் இருந்தவர்கள் தங்களை தனிமைபடுத்தியுள்ளனர். ஏற்கெனவே தமிழக அமைச்சர் காமராஜூக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு அவர் அண்மையில் மீண்டு வந்தது குறிப்பிடத்தக்கது.