ஈராக்கில் கார் குண்டுவெடிப்பில் 4 பேர் உயிரிழப்பு

ஈராக் நாட்டில் நடைபெற்ற கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் நான்கு பேர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர்.

ஈராக் நாட்டில் அல்கொய்தா, ஐ.எஸ்.ஐ.எஸ் உள்ளிட்ட பயங்கரவாத குழுக்கள் ஆதிக்கம் செலுத்தி வருகின்றன. இந்த பயங்கரவாத குழுக்களை ஒழிக்கும் நடவடிக்கையில் அந்நாட்டு பாதுகாப்பு படையினர் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையே, பொதுமக்கள் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து பயங்கரவாதிகள் அவ்வப்போது தாக்குதல்களை நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், ஈராக்கின் தலைநகர் பாக்தாத்திற்கு அருகே சர்த் நகரின் சந்தைபகுதியில் வெடிகுண்டுகள் நிரப்பப்பட்டு நிறுத்தப்பட்டிருந்த கார் திடீரென வெடித்து சிதறியது.

இந்த கார் குண்டு வெடிப்பு தாக்குதலில் சந்தைக்கு வந்திருந்தவர்கள் மற்றும் வியாபாரிகள் பலர் படுகாயமடைந்தனர். தகவல் அறிந்து விரைந்து வந்த மீட்புக்குழுவினர் படுகாயமடைந்தவர்களை ஆம்புலன்ஸ் மூலம் அருகில் உள்ள மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இருப்பினும், படுகாயமடைந்தவர்களில் நான்கு பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்கவில்லை. ஆனாலும், இந்த குண்டுவெடிப்பு சம்பவம் குறித்து பாதுகாப்பு படையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

இந்த தாக்குதல் யார் நடத்தினார்கள் என்பது குறித்து இன்னும் தகவல் வெளியாகவில்லை. இந்த தாக்குதலுக்கு காரணமானவர்கள் குறித்து அந்நாட்டு உளவுத்துறை தகவல் சேகரித்து வருகிறது.

More News >>