டோக்கியோ ஒலிம்பிக் போட்டி எப்போது? – ஜப்பான் அதிகாரி தகவல்
டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் என்று ஜப்பான் அதிகாரி டோஷிஹிரோ நிகாய் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகப்பெரிய விளையாட்டுத் திருவிழாவான ஒலிம்பிக் போட்டி ஜப்பான் தலைநகர் டோக்கியோவில் கடந்த ஆண்டு ஜூலை 24 ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 9 ஆம் தேதி வரை நடைபெற இருந்தது. அந்த நேரத்தில் முதன் முதலாக கொரோனா வைரஸ் தொற்று உலக முழுவதும் பரவ ஆரம்பித்தது. இதையடுத்து ஒலிம்பிக் போட்டி 2021 ஜூலை 23 ஆம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
கொரோனா வைரஸ் தற்போது உருமாறி உலகை மீண்டும் ஆட்டிப்படைக்கிறது. இதனால் இந்த ஆண்டும் ஒலிம்பிக் போட்டி ஒத்திவைக்கப்படுவதற்கு வாய்ப்புள்ளது.
இந்நிலையில், ஜப்பான் நாட்டின் ஆளும் கட்சியின் தலைவர்களில் ஒருவரான டோஷிஹிரோ நிகாய், கொரோனா தொற்று பரவல் மேலும் அதிகரித்து மோசமான சூழ்நிலை உருவானால் டோக்கியோ ஒலிம்பிக் போட்டி ரத்து செய்யப்படலாம் என்று கூறியுள்ளார். ஜப்பான் அரசாங்கம் அவசரகால நிலையை முடிவுக்கு கொண்டு வந்த பின்னரும், டோக்கியோவில் தீவிரமாக பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று பீதியை ஏற்படுத்தி உள்ளதாக கவலை தெரிவித்துள்ளார். ஜூலை 23 ஆம் தொடங்கவுள்ள டோக்கியோ ஒலிம்பிக் விளையாட்டுக்களுக்கான சமூக தொலைதூர நடவடிக்கைகள் மற்றும் பார்வையாளர்கள் மீதான கட்டுப்பாடுகளை உள்ளடக்கிய பணிகளை அரசாங்கம் முன்னெடுத்து வருவதாக கூறியுள்ளார். டோக்கியோ ஒலிம்பிக்கிற்கு இன்னும் மூன்று மாதங்களே உள்ளன, ஆனால் இதைச் சுற்றி அதிகளவான நிச்சயமற்ற தன்மை தற்போது உருவாகியுள்ளதாக அவர் கவலை தெரிவித்துள்ளார்.