8ஆயிரம் ரூபாய் வரை விற்கப்படும் ரெம்டெசிவர் - கள்ளச்சந்தை புகாரை தடுக்க மத்திய அரசு நடவடிக்கை!
இந்தியாவில் கொரோனா பரவல் உச்சம் தொட்டுள்ள நிலையில், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் 300 மடங்கு வரை அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது.
இந்தியாவில் கொரோனா இரண்டாம் அலை தீவிரமாகி வருகிறது. கொரோனா வைரஸ் பாதிப்பில் உலக அளவில் இந்தியா முதலிடத்தில் உள்ளது. இந்தியாவில் இதுவரை இல்லாத அளவாக 24 மணி நேரத்தில் 2 லட்சத்துக்கும் அதிகமானோருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. இதனால் பல மாநிலங்களில் உள்ள மருத்துவமனைகள் நிரம்பி வழிகின்றன. படுக்கை வசதிகளை ஏற்படுத்தும் வகையில், மாநில அரசுகளும் கூடுதல் படுக்கை வசதிகளுடன் கொரோனா பராமரிப்பு மையங்களை உருவாக்கி வருகின்றன.
இந்த சூழலில், கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. கொரோனா சிகிச்சைக்கு தேவைப்படும் ரெம்டெசிவிர் மருந்து கள்ளச்சந்தையில் 300 மடங்கு வரை அதிக விலைக்கு விற்கப்படுவதாக புகார் எழுந்துள்ளது. ரெம்டெசிவர் 899 ரூபாய் முதல் ஐந்தாயிரத்து 400 ரூபாய் வரை விற்கப்படுகிறது. தற்போது ஏற்பட்டுள்ள தட்டுப்பாட்டை பயன்படுத்தி சில மருந்து கடைகள், ரெம்டெசிவரை எட்டாயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
இந்தியாவில் 7 நிறுவனங்கள் ரெம்டெசிவிர் மருந்துகளை தயாரித்து வருகின்றன. இதனிடையே போதிய அளவு மருந்து கையிருப்பில் இருப்பதாகவும், கள்ளச்சந்தையில் விற்போர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என உள்துறை அமைச்சர் பசவராஜ் பொம்மை எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நிலையில், ரெம்டெசிவிர் மருந்து உற்பத்தியை அதிகரிக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் ரெம்டெசிவிர் தயாரிப்பு திறன் மாதத்துக்கு 78 லட்சம் குப்பிகளாக அதிகரிக்கும். மேலும் மருந்தின் விலையை குறைக்கவும் அவர்கள் முன்வந்துள்ளனர்.