இடுகாட்டில் இடமில்லை - பதறவைக்கும் குஜராத் கொரோனா நிலவரம்!

குஜராத்தில் கொரோனா பாதிக்கப்பட்டவர்களுக்கு படுக்கைகள் இல்லை. அவசர ஊர்திகள் இல்லை. இடுகாட்டில் வழக்கத்தை காட்டிலும் மூன்றிலிருந்து நான்கு மடங்கு அதிகமான உடல்கள் எரியூட்டப்படுகின்றன என தகவல் வெளியாகியுள்ளது.

குஜராத்தில் கொரோனா தொற்றால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை என அரசு கொடுக்கும் எண்ணிக்கை குறைவானதாக உள்ளது என உள்ளூர் ஊடக செய்திகள் தெரிவிக்கின்றன. எந்த அளவுக்கு முரணாக உள்ளதென்றால், கடந்த ஏப்ரல் 12 மற்றும் 13 தேதிகளில் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை வெறும் 22 என அரசு குறிப்பிடுகிறது. இதிலிருந்து அரசு மீதான நம்பகத்தன்மை குலைந்துள்ளது. ஆனால் அந்நகரில் உள்ள இடுகாடுகளில் வழக்கத்தை காட்டிலும் மூன்று அல்லது நான்கு மடங்கு உடல்கள் தகனம் செய்யப்பட்டுள்ளன.

இது மட்டுமல்லாமல் சில இடங்களில் உடல்களை தகனம் செய்வதற்கு 8-10 மணி நேரங்கள் வரை காத்திருக்கும் சூழலும் ஏற்பட்டுள்ளது. இதில் துயரத்தின் உச்சமாய் சூரத்தில் உள்ள இடுகாடு ஒன்றில் தொடர்ந்து உடல்கள் எரியூட்டப்படுவதால் எரி உலை உருகும் சூழல் ஏற்பட்டுள்ளதாக அங்குள்ள நபர்கள் தெரிவித்ததாக ஊடகங்கள் சில தெரிவிக்கின்றன.

குஜராத்தின் அகமதாபாத் நகரில் மருத்துவமனை ஒன்றில் நுழைய நீண்ட வரிசையில் அவசர ஊர்திகள் காத்துக் கொண்டிருக்கும் வீடியோவும் சமூக ஊடகங்களில் பரவி வருகிறது. குஜராத் மாடல் என்று கூறும் அனைத்து சுக்குநூறாகியுள்ளது. நிர்வாகம் சீர்குலைந்துள்ளதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

அகமதாபாத் மருத்துவ கூட்டமைப்பு, நிலைமை மிகவும் மோசமடைந்து வருவதால் கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

குஜராத் முழுவதும் பல்வேறு நகரங்களில் மருத்துவமனை வசதிகள், ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டிசிவிர் பற்றாக்குறை நிலவி வருகிறது. நிலைமை சீரடைய அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.

More News >>