தெலுங்கு நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி!
நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது. அண்மையில் அவர் நடித்த வக்கீல் சாப் படம் ரீலிசானது குறிப்பிடத்தக்கது.
தெலுங்கு சினிமாவின் பவர் ஸ்டார் என்று ரசிகர்களால் அன்புடன் அழைக்கப்படும் நடிகர் சிரஞ்சீவியின் தம்பியும் ஜன சேனா கட்சியின் தலைவருமான நடிகர் பவன் கல்யாணுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டது. தெலுங்கின் முன்னணி நடிகராக விளங்கும் பவன் கல்யாணின் இந்தி பிங்க் ரீமேக் வக்கீல் சாப் கடந்த 9-ஆம் தேதி வெளியாகி வரவேற்பைப் பெற்றது. பல்வேறு கூட்டங்களில் கலந்துகொண்ட பவன் கல்யாணின் உதவியாளருக்கு அண்மையில் கொரோனா தொற்று உறுதி செய்யபட்டது.
இதையடுத்து உதவியாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால், நான் தனிமைபடுத்திக்கொண்டேன் என்று கூறியிருந்தார். இந்நிலையில் பவன் கல்யாணுக்கு லேசான காய்ச்சல் இருந்துவந்துள்ளது. இதையடுத்து கொரோனா பரிசோதனை செய்துகொண்ட அவருக்கு, கொரோனா தொற்று பாதிப்பு இருப்பது உறுதியாகியுள்ளது.
தற்போது மருத்துவர்களின் முழு ஆலோசனையின் பேரில் சிகிச்சை எடுத்து வருகிறார். அந்தப் புகைப்படங்களும் அவரது அறிக்கையையும் அவரது ஜனசேனா கட்சியின் குழு தற்போது வெளியிட்டுள்ளது.
கடந்த 2008-ஆம் ஆண்டு சிரஞ்சீவி பிரஜா ராஜ்யம் கட்சியை ஆரம்பித்தபோது அவருடன் இணைந்து அரசியல் பணிகளை மேற்கொண்டார் பவன் கல்யாண். ஆனால், சிரஞ்சீவி கட்சியை கலைத்துவிட்டு காங்கிரஸில் இணைந்தபோது, அதில் மாற்றுக்கருத்து ஏற்பட்டு கடந்த 2014 ஆம் ஆண்டு ஜன சேனா என்ற கட்சியை ஏற்படுத்தி முழுநேர அரசியல்வாதியாய் மாறினார். ஆனால், அவர் நினைத்தது போல் அரசியல் வெற்றிகரமாக அமையவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. அரசியல்வாழ்க்கை கைகொடுக்காத நிலையில் மீண்டும் சினிமாத்துறையில் அவர் பார்வை திரும்பியிருக்கிறது.