`மருத்துவ ஆக்ஸிஜன் 100 டன்.. மகாராஷ்ட்ராவை காப்பாற்ற களமிறங்கிய அம்பானி!
கொரோனா 2ம் அலை நாடு முழுவதும் கவலைகளை அதிகரித்துள்ளது. மேலும் குஜராத், மகாராஷ்ட்ரா போன்ற மாநிலங்களில் கோவிட் 19 நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் அனைத்து மருத்துவமனைகளிலும் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டு ஏற்பட்டுள்ளது. இதை உடனடியாக சரி செய்ய வேண்டும் என மாநில முதல்வர் விஜய் ரூபானிக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது மத்திய அரசு. குஜராத் முழுவதும் பல்வேறு நகரங்களில் மருத்துவமனை வசதிகள், ஆக்ஸிஜன் மற்றும் ரெம்டிசிவிர் பற்றாக்குறை நிலவி வருகிறது. நிலைமை சீரடைய அரசு போர்கால அடிப்படையில் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற குரல்கள் எழுந்துள்ளன.
இதற்கிடையே, மருத்துவமனைகளில் ஏற்பட்டுள்ள ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டை குறைக்க மகாராஷ்டிரா அரசுக்கு முகேஷ் அம்பானி கைகொடுக்க முடிவெடுத்துளளார். தனது ரிலையன்ஸ் பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையங்களில் இருந்து மருத்துவத்துக்கு தேவைப்படும் மருத்துவ ஆக்ஸிஜன் 100 டன்னை மகாராஷ்ட்ரா அரசுக்கு கொடுக்க அம்பானி முடிவெடுத்துள்ளார். இதனை மகாராஷ்ட்ரா அரசும் உறுதிப்படுத்தியுள்ளது.
முன்னதாக, ``ஆக்சிஜன் உற்பத்தியை அதிகரிக்க அமைச்சகங்கள் மற்றும் மாநில அரசுகளின் ஒத்துழைப்பு தேவை. ஆக்சிஜன் சிலிண்டர்கள் எடுத்து செல்லும் கனரக வாகனங்களின் முழுநேர இயக்கத்தை உறுதிசெய்யவேண்டும்" என்று மாநில அரசுகளுக்கு பிரதமர் மோடி வலியுறுத்தி இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.