ஞாயிற்றுக்கிழமை ஊரடங்கு.. மாஸ்க் இல்லைனா அபராதம்.. கடுமை காட்டும் யோகி!
இந்தியாவில் கொரோனா 2ம் அலையின் தீவிரம் அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் ஞாயிற்றுக்கிழமைகளில் மட்டும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது. மேலும் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ.1000 அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறியுள்ளது. முகக்கவசம் அணியாமல் முதல் முறை சிக்கினால் 1000 ரூபாய் அபராதமும், அதே இரண்டாம் முறையாக சிக்கினால் 10,000 ரூபாய் அபராதமும் விதிக்கப்படும் என்று கடுமை காட்டியுள்ளது.
இதனை முதல்வர் யோகி ஆதித்யநாத்தும் உறுதி செய்துள்ளார். கொரோனாவை கட்டுப்படுத்த அரசு விதித்துள்ள கடுமையான புதிய நோய் கட்டுப்பாடு விதிகளின் படி இந்த புதிய அபராத முறை நடைமுறைக்கு வந்துள்ளது. மேலும் கொரோனா காரணமாக பள்ளிகளுக்கு மே 15 வரை விடுமுறையும் அறிவித்துள்ளது உத்தரபிரதேச மாநில அரசு.
உத்தர பிரதேசத்தில், கடந்த 2 - 15ஆம் தேதி வரை சுமார் 1,46,577 பேர் புதிதாக கொரோனா நோய் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் சுமார் 10 மாவட்டங்களில் இரவு 8 முதல் காலை 7 மணி வரையில் இரவு நேர ஊரடங்கையும் உத்தரபிரதேச மாநில அரசு அமல் செய்துள்ளது.