திமுக தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு சமூக நலன்களுக்கான முன்மாதிரி வருது
2020 ஆம் ஆண்டில் சமூக நலன்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டதற்கான விருது மகாராஷ்டிரா மாநில ஆளுநர் தலைமையிலான விழாவில், மு.க.ஸ்டாலினுக்கு வழங்கப்பட்டுள்ளது.
இன்டராக்டிவ் போரம் ஆப் இந்தியன் எகானமி என்ற அமைப்பு ஆண்டுதோறும், சமூக நலன்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டதற்கான விருதை வழங்கி வருகிறது. கோவா மாநிலம் தாஜ் ரெசார்ட் மற்றும் கன்வென்ஷன் சென்டரில் மகாராஷ்டிரா மாநில ஆளுநர் பகத் சிங் கோஷியாரி தலைமையில் நடைபெற்ற விழாவில், தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு 2020 ஆம் ஆண்டில் சமூக நலன்களுக்கு முன்மாதிரியாக செயல்பட்டதற்கான விருது வழங்கப்பட்டது.
கடந்த காலங்களில் இவ்விருதை, மணிப்பூர் முதலமைச்சர் பைரன் சிங், ஜார்கண்ட் முதலமைச்சர் ஹேமந்த் சோரன், டெல்லி துணை முதலமைச்சர் மணிஷ் சிசோடியா உள்ளிட்டோர் பெற்றுள்ளனர்.
சமூக நலனுக்கான இந்த விருதை ஏற்றுக் கொண்டு மு.க.ஸ்டாலின் உரையாற்றிய வீடியோ நிகழ்ச்சியில் ஒளிபரப்பப்பட்டது. அதில், பொதுவாழ்வில் இருப்போருக்கு சமூக நலத்திட்டங்களை நிறைவேற்றுவது மிக முக்கியக் கடமை என ஸ்டாலின் தெரிவித்துள்ளார். பொதுவாழ்வில் இருக்கும் என் போன்றோரின் பணிகளை மேலும் ஊக்குவிக்கும் வகையில் வழங்கப்பட்டுள்ள இந்த விருதிற்கு எனது நன்றியைத் தெரிவித்துக் கொள்வதாக கூறினார். அரசியல் சட்டம் உறுதியளித்துள்ள சமூக, பொருளாதார பாதுகாப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதில் என்றைக்கும் இந்தியாவின் முன்கள வீரனாகத் தமிழகம் இருக்கும் என்று மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்தார்.