விவேக்கிற்கு சுயநினைவோ, நாடித்துடிப்போ இல்லை – சிம்ஸ் நிர்வாகம் விளக்கம்!
நடிகர் விவேக் சிகிச்சை பலனின்றி சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் உயிரிழந்துள்ளார். இது தொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் விளக்கமளித்துள்ளது.
நேற்று காலை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து விவேக்கின் மனைவியும் மகளும் உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது.
அவரது இதயத்தில் 100 சதவிகித அடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது. விவேக்கிற்கு மூச்சுத்திணறலும் இருப்பதாக மருத்துவமனை வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன. விவேக்கிற்கு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிக்சையும் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உயிரைக்காக்க மருத்துவர்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.
கண்ணாடி பேழையில் வைக்கப்பட்டுள்ள அவரது உடலுக்கு பொதுமக்களும் திரைத்துறை பிரபலங்களும் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தி வருகின்றனர். இன்று மாலை 5 மணியளவில் அவரது உடலுக்கு இறுதி சடங்கு செய்யப்பட்டு விருகம்பாக்கம் மின் மயானத்தில் தகனம் செய்யப்படவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், நடிகர் விவேக்கிற்கு அளிக்கப்பட்ட சிகிச்சை குறித்து சிம்ஸ் மருத்துவமனையின் துணைத்தலைவர் ராஜூ சிவசாமி கூறுகையில், ''நடிகர் விவேக் நேற்று காலை 11 மணிக்கு அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் அனுமதிக்கப்படும்போது விவேக்குக்கு சுயநினைவோ, நாடித்துடிப்போ இல்லை. உடல்நிலையை பரிசோதித்து உடனடியாக ஆஞ்சியோகிராம் செய்யப்பட்டது. விவேக்கின் உடல்நிலை மோசமாக இருந்தது. விவேக்கின் இதயம் பலவீனமாக இருந்ததால் சிகிச்சை பலனளிக்கவில்லை'' என்று தெரிவித்துள்ளார்.