மண்டேலா படத்தின் காட்சிகளை “கட்” செய்ய சொல்லும் முடிதிருத்தும் தொழிலாளர்கள்

அறிமுக இயக்குநர் மடோன் அஷ்வின் இயக்கத்தில் யோகி பாபு நடித்துள்ள படம் மண்டேலா. குறும்படங்களை இயக்கி வந்த மடோன் அஷ்வின் மண்டேலா படத்தின் மூலம் பெரிய திரையில் இயக்குனராக அறிமுகமாகிறார். இந்த படத்திற்கு பரத் சங்கர் இசையமைத்துள்ளார். ஃபிலோமின் ராஜ் எடிட்டிங் செய்துள்ளார். வித்யு அய்யண்ணா ஒளிப்பதிவு செய்துள்ளார். சஷிகாந்த் மற்றும் சக்ரவர்த்தி தயாரித்துள்ள இந்த படம் கடந்த 6 ஆம் தேதி வெளியாகி திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கிறது.

இன்றைய அரசியல் சூர்நிலையை மையமமாக வைத்து இப்படம் எடுக்கப்பட்டுள்ளது.

சூரங்குடி என்கிற ஒரு கிராமம், அது வடக்கூர் - தெக்கூர் என இரண்டு சாதிகளாக பிரிந்து கிடக்கிறது. அந்த ஊரில் தலைவருக்கான உள்ளாட்சி தேர்தல் நடைபெற, அந்த ஊர் மக்களால் ஒடுக்கப்பட்டுள்ள முடிதிருத்தும் தொழில் செய்யும் யோகிபாபு, யார் வெற்றியாளர் என்பதை தீர்மானிக்கும் ஒருவராக மாறுகிறார். மண்டேலாவின் ஒரு ஓட்டுக்காக என்னவெல்லாம் நடக்கிறது? இறுதியில் வெற்றி பெற்றது யார்? என்பதை வைத்து மீதமுள்ள கதை சுவாரசியமாக நகர்கிறது.

யோகிபாபுவின் ஒரு வாக்கிற்காக இரு அரசியல் கட்சிகள் அவரைத் தாக்குவதும், செருப்பால் அடிப்பது, காலால் உதைப்பது காயப்படுத்துவதும், கழிவறைகளை சுத்தம் செய்வதற்குதான் லாயக்கு போன்ற வசனங்கள் இடம்பெற்றுள்ளன.

இந்நிலையில் மண்டேலா திரைப்படம் முடி திருத்தும் தொழிலாளர்களை இழிவுப்படுத்தும் வகையிலும், மனதை புண்படுத்தும் வகையிலும் உள்ளதாக முடி திருத்தும் தொழிலாளர்கள், மண்டேலா படத்திற்கு எதிராக போர்க்கொடி தூக்கியுள்ளனர்.

தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் மண்டேலா திரைப்படத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து முடிதிருத்தும் தொழிலாளர்கள் தங்கள் சலூன் கடைகளில் கருப்புக் கொடி ஏற்றியுள்ளனர்.

பல்வேறு மாவட்டங்களில் மாவட்ட ஆட்சித்தலைவரை முடிதிருத்தும் தொழிலாளர்கள் சங்கத்தினர், நேரில் சந்தித்து, மண்டேலா திரைப்படம், எங்கள் சமுதாய மக்களின் மனதை மிகவும் புண்படுத்தியுள்ளது என்றும், இதுபோன்ற படக்காட்சிகளால் சாதி வன்கொடுமைகள் நடக்க வாய்ப்புகள் உள்ளதாகவும், இதனால் மண்டேலா திரைப்படத்தை தடைசெய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்துள்ளனர்.

More News >>