கடைசிப் போட்டியில் கண்ணீரை அடக்கிக் கொண்டு ஆடினார் - சச்சின் உணர்ச்சிப் பெருக்கு
தனது கடைசி போட்டியில் தாயார் பார்த்துக் கொண்டு இருந்ததால், உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, கண்ணீரை அடக்கிக்கொண்டு பேட்டிங் செய்தேன் என்று மாஸ்டர் பேட்ஸ்மேன் சச்சின் டெண்டுல்கர் கூறியுள்ளார்.
இது குறித்து புத்தக வெளியீட்டு விழா ஒன்றில் கலந்துகொண்டு பேசிய சச்சின் டெண்டுல்கர், “நான் எனது கடைசி மற்றும் 200 டெஸ்ட் போட்டியை மும்பையில் நடத்த விரும்பினேன் என்பதற்கான காரணம் இன்னும் யாருக்கும் தெரியாது. நான் கிரிக்கெட் விளையாட்டைப் பழகிய வயதில் இருந்து, பள்ளியில் கிரிக்கெட் விளையாடியதில் இருந்து இந்திய அணிக்காக 24 ஆண்டுகள் விளையாடியதுவரை ஒரு முறைகூட என் அம்மா பார்த்தது இல்லை.
எனது ஆட்டத்தை கடைசியாக நான் ஓய்வு பெறும்போது அவர் அரங்கில் வந்து பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். இதற்காக பிசிசிஐ நிர்வாகத்திடம் கூறினேன் அவர்களும் ஒப்புக்கொண்டனர். என் அம்மாவால் நடக்க முடியாத காரணத்தால், அவரை அழைத்துவர அனைத்துவிதமான ஏற்பாடுகளும் செய்யப்பட்டு, வான்கடே விஐபி அறையில் இடம் ஒதுக்கப்பட்டு இருந்தது.
அன்றைய போட்டியின் கடைசி ஓவரை டேரன் சமி வீசினார். அவரின் ஓடிவருவதைப் பின்னால் இருந்த மெகா திரையில் எனது தாயார் அமர்ந்து என்னுடைய விளையாட்டை பார்ப்பதைப் பார்த்தவுடன் எனக்கு உணர்ச்சிப் பெருக்கில் என்ன செய்வதென்று தெரியவில்லை.
அந்த விலைமதிக்க முடியாத தருணத்தை என்னவென்று நான் சொல்வது. எனது ஆட்டத்தை முதல்முறையாக நேரடியாகப் பார்க்க வந்துள்ளார் என்று நினைத்து மகிழ்ந்தேன். என் உணர்ச்சிகளைக் கட்டுப்படுத்திக்கொண்டு, கண்ணீரை அடக்கிக்கொண்டு பேட்டிங் செய்தேன். நான் மட்டும் உணர்ச்சிப்பெருக்கில் பந்தைக் கவனிக்காமல் விளையாடி இருந்தால், நான் ஆட்டமிழந்து இருப்பேன்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com