இயற்கைக்கு ஏன் இந்த அவசரம்! – விவேக் மறைவுக்கு ஸ்டாலின் இரங்கல்!
நடிகர் விவேக் மறைவுக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
நேற்று காலை நடிகர் விவேக்கிற்கு மாரடைப்பு ஏற்பட்டது. இதையடுத்து அவர் சென்னை வடபழனியில் உள்ள சிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டார். தகவல் அறிந்து விவேக்கின் மனைவியும் மகளும் உடனடியாக அவரை வடபழனியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பரிசோதனை முடிவில் ஆஞ்சியோ அறுசை சிகிச்சை செய்ய முடிவு செய்யப்பட்டது. . அவரது இதயத்தில் 100 சதவிகித அடைப்பு ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அவருக்கு எக்மோ கருவி மூலம் சிகிக்சையும் அளிக்கப்பட்டு வந்தது. அவரது உயிரைக்காக்க மருத்துவர்கள் போராடி வந்தனர். இந்த நிலையில் இன்று அதிகாலை 4.35 மணி அளவில் நடிகர் விவேக்கின் உயிர் பிரிந்ததாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். . இந்நிலையில் நடிகர் விவேக் மறைவுக்கு திமுக தலைவர் ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள இரங்கல் குறிப்பில், ``சின்னக் கலைவாணர் எனத் திரையுலகில் புகழ்பெற்ற நகைச்சுவைக் கலைஞர் விவேக் அவர்களின் மறைவுச் செய்தி பேரதிர்ச்சி அளிக்கிறது.
பல்கலை வித்தகராக விளங்கிய விவேக் தனது தனித்துவமான நடிப்பாற்றலால் நகைச்சுவையுடன் விழிப்புணர்வையும் மக்களுக்கு வழங்கியவர். பத்மஸ்ரீ விருது பெற்ற பெருமைக்குரியவர். தலைவர் கலைஞரிடம் தனி அன்பு கொண்டவர். மரம் நடுதல் போன்ற சூழலியல் சார்ந்த சமூகப் பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டவர். இன்னும் பல சாதனைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் படைத்த நடிகர் விவேக்கை இயற்கை இத்தனை அவசரமாக ஏன் பறித்துக் கொண்டதோ!
அவரது பிரிவால் வாடும் குடும்பத்தினர் நண்பர்கள் திரையுலகினர் அனைவருக்கும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று தெரிவித்துள்ளார்.