மகன் இல்லைனா என்ன.. கடைசி நேரத்திலும் சம்பிரதாயங்களை உடைக்க வித்திட்ட விவேக் குடும்பம்!
திரையில் பல சீர்த்திருத்த கருத்துக்களை பேசியவர் நடிகர் விவேக். நகைச்சுவையினூடாகச் சமூகத்துக்குத் தேவையான முற்போக்கு கருத்துக்களையும் பேசி ரசிகர்களை வியந்து பார்க்க வைத்தார். காரில் எலுமிச்சம்பழம் கட்டுவது, தீண்டாமைக் கொடுமை, மண் சோறு சாப்பிடுவது என அனைத்து மூட நம்பிக்கைகளையும் போறபோக்கில் கலாய்த்துத் நகைச்சுவையோடு பேசியதே இவரின் அடையாளமானது. இதற்கிடையே, இறந்த பின்னும் ஒரு மூட நம்பிக்கையை உடைக்க உதவியாக இருந்துள்ளார்.
ஆம், அவரின் இரு மகள்களில் ஒருவர் விவேக்கிற்கு இறுதிச்சடங்கை செய்துள்ளனர் என்று தகவல் வெளியாகியுள்ளது. பொதுவாக ஒரு பெண், தன் தந்தைக்கு இறுதிச் சடங்கைச் செய்தது இதுதான் முதல் முறை என்று சொல்ல முடியாது. அங்கொன்றும் இங்கொன்றுமாக நடந்தாலும் இன்றும் அது பரவலாக ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இறுதிச் சடங்கில் பெண்கள் கலந்துகொள்ளக் கூடாது, மயானம் வரை வரக்கூடாது போன்ற சம்பிரதாயங்கள் இப்போதும் கடைபிடிக்கப்பட்டுத்தான் வருகின்றன.
பெண்கள் இறுதிச் சடங்கில் பங்கேற்காமல் தடுக்கப்படுவதற்கு சடங்கு, சம்பிரதாயம் எனப் பல காரணங்கள் அடுக்கப்பட்டாலும், சொத்துரிமை என்பதும் முக்கியக் காரணமாக இருக்கிறது. இறுதிச் சடங்கை நிறைவேற்றுவதால் எங்கே பெண்ணுக்குச் சொத்து சேர்ந்துவிடுமோ என்ற பயத்தாலேயே பெண்களுக்கு இறுதிச் சடங்கில் அனுமதி இல்லை. இது போல, இன்னும் பல காரணங்கள் சொல்லப்படுகின்றது. இந்த நிலையில் தான் விவேக் மகள் இறுதி காரியங்களில் செய்துள்ளது பாராட்டுகளை பெற்றுள்ளது.