முகத்தில் உள்ள கொழுப்பை குறைத்து அழகாக்குவது எப்படி தெரியுமா?
முகம் அழகாக தோற்றமளிக்கவேண்டும் என்ற விருப்பம் அனைவருக்கும் உண்டு. எத்தனையோ ஃபேஷியல் முறைகள் உள்ளன. பல அழகு நிலையங்களும் உள்ளன. ஆனால் முகத்தின் சருமத்தை பொலிவாக தோற்றமளிக்க வைப்பதைக் காட்டிலும் முகத்திலுள்ள தேவையற்ற கொழுப்பை நீக்குவதே அழகைக் கூட்டித் தரும் என்பதில் ஐயமில்லை.
பெல்லி ஃபேட் எனப்படும் வயிற்றுத் தசையை குறைப்பதற்கு உடற்பயிற்சிக் கூடங்களில் கருவிகள் உள்ளன. அதேபோன்று தொடையிலுள்ள கொழுப்பு, புஜங்களில் உள்ள கொழுப்பை கரைக்கவும் கருவிகள் உள்ளன. முகத்திலுள்ள கொழுப்பை கரைக்க ஏதாவது வழி உள்ளதா? கருவிகள் இல்லாமல் எளிதான பயிற்சிகள் மூலமே முகத்திலுள்ள கொழுப்பினை கரைக்க முடியும்.
கன்னங்களுக்குள் காற்று
வாயைக் மூடிக்கொண்டு கன்னங்களுக்குள் காற்று உப்பும்படி செய்ய வேண்டும். இது ஏதோ சிறுபிள்ளை விளையாட்டுப்போல் தோன்றலாம். ஆனால், கன்னங்களை சுற்றியிலுள்ள தசைகளில் இரத்த ஓட்டத்தை அதிகரிக்கச் செய்து, கொழுப்பினை கரையச் செய்யும் ஆற்றல் இதற்கு உண்டு. வாயை இறுக்கமாக மூடிக்கொண்டு கன்னங்களுக்குள் காற்றை உப்பச் செய்து, முதலாவது ஒரு பக்கக் கன்னத்தை உப்பச் செய்யவும். 10 விநாடிகள் வைத்திருந்து, அடுத்தப் பக்க கன்னத்தை உப்பச் செய்யவும். இதை 10 முறை மாற்றி மாற்றி செய்யும்போது கன்னத்திலுள்ள கொழுப்பு கரையும்.
புருவங்களை உயர்த்துதல்
நெற்றியில் தெரியும் சுருக்கம் பலருக்கு முதிய தோற்றத்தை அளித்துவிடுகிறது. புருவங்கள் தொங்குவது போன்ற தோற்றம் ஏற்பட்டாலும் தோற்றப்பொலிவு இராது. ஆட்காட்டி மற்றும் நடுவிரல்களை புருவங்களுக்கு இடையே வைக்கவும். மற்ற விரல்களும் உள்ளங்கையும் முகத்தின்மேல் இருக்கட்டும். கண்கள் திறந்திருக்கட்டும். இரு விரல்களின் உதவியால் புருவங்களை மேலும் கீழும் ஏற்றி இறக்கவும். ஒவ்வொரு பக்கமும் 30 விநாடிகள் செய்யவும்.
உதடு கோணல்
இது சற்று கடினமான முயற்சி. ஆனால் இதன் காரணமாக வாய், கழுத்து மற்றும் கன்னப்பகுதிகளிலுள்ள தசை குறையும். கீழுதட்டை பின்னாக தள்ளவும் அல்லது வாயின் ஒரு புறமாக கீழுதட்டை கோணலாக வைக்கவும். தொண்டையின் அந்தப் பகுதியிலுள்ள தசைகளை இறுக்கவும். இதை 10 விநாடிகள் செய்ய வேண்டும்.
தாடையை உயர்த்துதல்
முகத்தின் கீழ்ப்பாதி பகுதியிலுள்ள கொழுப்பினை குறைக்க கீழ்ப்புற தாடையை உயர்த்தும் பயிற்சி உதவும். தலையை பின்புறமாக சாய்க்கவும். முடிந்த அளவு கழுத்தை நீட்டி தலையை சரிக்கவும். இப்போது கீழுதட்டை மேலுதட்டுக்கு மேலாக நகர்த்தவும். இந்த நிலையில் 10 விநாடிகள் இருக்கவேண்டும். இப்படிச் செய்யும்போது கண்கள் மேலே நோக்கவேண்டும்.
கன்ன எலும்பை உயர்த்துதல்
கன்ன தசைகளை இறுக்கமாக்க இந்தப் பயிற்சி உதவும். தேவையற்ற கொழுப்பினை கரைத்து, கன்னத்தின் வடிவை காக்க இது உதவும். உங்கள் விரல்களை கன்னத்தின் மீது வைத்து மெதுவாக கன்னத் தோலை மேற்புறம் தள்ளவும். வாயை 'O' போன்று திறக்கவும். 5 விநாடிகள் இருந்தால், கன்னத் தசைகளில் அழுத்தத்தை உணரலாம். இதை 10 முறை மீண்டும் மீண்டும் செய்ய வேண்டும்.
எளிய இந்தப் பயிற்சிகளால் முகத்திலுள்ள தேவையற்ற கொழுப்பு குறைந்து தோற்றம் பொலிவு பெறும்.