மீண்டும் ஊரடங்கு: எவற்றுக்கு எப்போது அனுமதி?
அதிகரித்து வரும் கொரோனா பரவலைக் கருத்தில் கொண்டு சில கட்டுப்பாடுகளை விதிப்பதாக அரசு அறிவித்துள்ள நிலையில் தமிழ்நாடு முழுவதும் ஏப்ரல் 20ம் தேதி முதல் இரவு நேர ஊரடங்கு நடைமுறைக்கு வருகிறது. மார்ச் 28ம் தேதி கணக்குப்படி, 13,070 பேர் கோவிட்-19 பாதிப்புக்காக சிகிச்சை பெற்று வந்த நிலையில், ஏப்ரல் 17ம் தேதி சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை 65,635 ஆக உயர்ந்துள்ளது. இதைக் கருத்தில் கொண்டு புதிய கட்டுப்பாடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இரவு நேர ஊரடங்கு:
மாநிலத்தின் அனைத்து பகுதிகளிலும் இரவு 10 மணி முதல் காலை 4 மணி முடிய இரவு நேர ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். இரவு நேர ஊரடங்கின்போது தனியார் மற்றும் பொது பேருந்து போக்குவரத்து, வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படாது.
தமிழ்நாட்டில் இரவு நேரங்களில் பொது ஊரடங்கு நடைமுறையில் இருப்பதால், வெளி மாநிலம் மற்றும் மாவட்டங்களுக்கு இடையேயான பொது மற்றும் தனியார் போக்குவரத்தும் இரவு 10 முதல் காலை 4 மணி வரை அனுமதிக்கப்பட மாட்டாது.
அவசர மருத்துவ தேவைகளுக்கும், விமான நிலையம் மற்றும் ரயில் நிலையம் செல்ல மட்டும் வாடகை ஆட்டோ, டாக்ஸி மற்றும் தனியார் வாகன உபயோகம் அனுமதிக்கப்படும். பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் இரவு நேர ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும்.
பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை
பெட்ரோல் மற்றும் டீசல் விற்பனை நிலையங்கள் தொடர்ந்து செயல்பட அனுமதிக்கப்படும். தொடர் செயல்முறை தொழிற்சாலைகள் மற்றும் அத்தியாவசிய பொருள்கள் தயாரிக்கும் தொழிற்சாலைகள் இரவு நேர ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும். இந்நிறுவனங்களில் இரவு நேர பணிக்குச் செல்லும் பணியாளர்கள், தனியார் நிறுவனங்களின் இரவு காவல் பணியிலிருப்போர் அடையாள அட்டை மற்றும் அனுமதி கடிதம் வைத்திருப்பின் அனுமதிக்கப்படுவர்.
ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு:
தமிழ்நாட்டின் அனைத்து பகுதிகளிலும் ஞாயிற்றுக்கிழமைகளில் முழு ஊரடங்கு நடைமுறைப்படுத்தப்படும். அன்றைய தினம் இறைச்சி கடைகள், மீன் கடைகள், காய்கறி கடைகள், சினிமா தியேட்டர்கள், வணிக வளாகங்கள் மற்றும் அனைத்து கடைகள் செயல்பட அனுமதியில்லை.
பால் விநியோகம், பத்திரிகை விநியோகம், மருத்துவமனைகள், மருத்துவ பரிசோதனை கூடங்கள், மருந்தகங்கள், ஆம்புலன்ஸ் மற்றும் அமரர் ஊர்தி சேவைகள், சரக்கு வாகனங்கள், எரிபொருள் வாகனங்கள் முழு ஊரடங்கின்போது அனுமதிக்கப்படும்.
உணவு பார்சல்
முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நாள்களில் உணவகங்களில் காலை 6 முதல் 10 மணி வரையிலும், நண்பகல் 12 முதல் மதியம் 3 மணி வரையிலும் மாலை 6 முதல் இரவு 9 மணி வரையிலும் பார்சல் சேவை மட்டும் அனுமதிக்கப்படும். ஸ்விக்கி, ஸொமேட்டோ போன்றவை அந்த நேரங்களில் மட்டும் செயல்பட அனுமதியுண்டு.
திருமணம்
முழு ஊரடங்கு நடைமுறையில் உள்ள நாள்கள் உள்பட அனைத்து நாள்களிலும் திருமணம் / திருமணம் சார்ந்த நிகழ்வுகள் 100 நபர்களுக்கு மிகாமல், இறப்பு சார்ந்த நிகழ்வுகள் 50 நபர்களுக்கு மிகாமல் நடைபெற அனுமதியுண்டு.
சுற்றுலா
சுற்றுலா தலங்கள், கடற்கரை பகுதிகள், பூங்காங்கள், உயிரியல் பூங்காக்கள், அருங்காட்சியகங்களுக்கு பொது மக்கள் செல்ல அனுமதியில்லை.
தேநீர் கடை
நிலையான வழிகாட்டு நடைமுறைகளைப் பின்பற்றி தேநீர் கடைகள், உணவு விடுதிகள், காய்கறி கடைகள், பலசரக்கு கடைகள் உள்பட அனைத்து கடைகளும் வணிக வளாகங்கள், ஷோரூம்கள், பெரிய நகை மற்றும் ஜவுளி கடைகள் ஒரே நேரத்தில் 50 விழுக்காடு வாடிக்கையாளர்களுடன் இரவு 9 மணி வரை செயல்படலாம்.
மதம் சார்ந்த விழாக்களுக்கு ஏற்கனவே ஏப்ரல் 10ம் தேதி முதல் தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் முன்னரே ஏற்பாடு செய்யப்பட்டு அனுமதி வாங்கப்பட்டிருக்கும் விழாக்கள் 50 நபர்களுக்கு மிகாமல் கலந்துகொண்டு நடத்த அனுமதியுண்டு.
ப்ளஸ் டூ தேர்வு
ப்ளஸ் டூ மாணவர்களுக்கான பள்ளிக் கல்வித் துறை மூலம் நடத்தப்படும் பொதுத் தேர்வு தள்ளி வைக்கப்படுகிறது. செயல்முறை தேர்வு மட்டும் திட்டமிட்டபடி நடக்கும். கல்லூரி மற்றும் பல்கலைக்கழக ஆசிரியர்கள் வீட்டிலேயே இணைய வழியாக (ஆன்லைன்) வகுப்பை எடுக்கவேண்டும். அரசு மற்றும் தனியார் கல்லூரி, பல்கலைக்கழக தேர்வுகள் இணைய வழியாக மட்டுமே நடத்தப்பட வேண்டும்.
முகக்கவசம் அணிவரு, சோப்பு அல்லது கை சுத்திகரிப்பான் கொண்டு கைகளை சுத்தம் செய்வது, சமூக இடைவெளியை கடைபிடிப்பது ஆகியவற்றை தவறாமல் செய்ய வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.