“பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும்” – மம்தா ஆவேசம்
நாட்டில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்ததற்கு பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மேற்கு வங்க முதலமைச்ரும், திரிணாமுல் காங்கிரஸ் தலைவருமான மம்தா பானர்ஜி வலியுறுத்தி உள்ளார்.
சொந்த நாட்டில் கொரோனா வைரஸ் தடுப்பூசிக்கு தட்டுப்பாடு நிலவுகிறபோது, தனது சொந்த செல்வாக்கை வளர்த்துக்கொள்வதற்காக மோடி தடுப்பூசிகளை ஏற்றுமதி செய்கிறார் என மம்தா குற்றம்சாட்டியுள்ளார்.
தற்போதைய நிலைமைக்கு அவர்தான் காரணம் என்றும், 2021 ஆம் ஆண்டின் நிர்வாக திட்டமிடலுக்கு அவர் எதையும் செய்யவில்லை என விமர்சித்துள்ளார்.
ஒரு நெருக்கடியான சூழலுக்கு ஒட்டுமொத்த நாட்டையும் அவர் கொண்டு வந்து விட்டார் என புகார் தெரிவித்துள்ளார்.
80 நாடுகளுக்கு தடுப்பூசி ஏற்றுமதி செய்கிறீர்கள். நீங்கள் உலகில் மற்றவர்களுக்கு உதவுவதில் பிரச்சினை ஏதும் இல்லை. ஆனால் முதலில் மகாராஷ்டிரா, உத்தரபிரதேசம், மேற்கு வங்காளம் மற்றும் பிற மாநிலங்களுக்கு வழங்குங்கள். ஆனால் இதையெல்லாம் செய்யத்தவறி விட்டு, உலக சமூகத்தில் உங்கள் செல்வாக்கை வளர்ப்பதில்தான் கவனத்தை செலுத்துகிறீர்கள் என விலாசியுள்ளார்.
நாடு முழுவதும் ஆக்சிஜனுக்கும், வைரஸ் எதிர்ப்பு மருந்தான ரெம்டெசிவிருக்கும் தட்டுப்பாடு நிலவுகிறது. யார் இதற்கு பொறுப்பு ஏற்பது? என்றும் அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று பரவலுக்கு, பொறுப்பேற்று பிரதமர் மோடி ராஜினாமா செய்ய வேண்டும் என்று மம்தா பானர்ஜி வலியுறுத்தியுள்ளார்.