புத்தகத்தை பார்த்து தேர்வெழுதுங்கள் – அண்ணா பல்கலைகழகத்தின் புதிய அறிவிப்பு!
மே மாதம் நடைபெற உள்ள அண்ணா பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வின்போது பொறியியல் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து தேர்வு எழுத அண்ணா பல்கலைக்கழகம் அனுமதி அளித்துள்ளது. கொரோனா பரவல் எதிரொலி காரணமாக இப்படியொரு அறிவிப்பு வெளியாகியிருக்கிறது.
தமிழகத்தில் கொரோனா பரவல் கட்டுகடங்காமல் அதிகரித்து வருகிறது. கொரோனாவை கட்டுப்படுத்தும் வகையில் பல்வேறு புதிய கட்டுபாடுகளை மாநில அரசு வெளியிட்டுள்ளது. இதனால் 12வகுப்பு தேர்வுகளும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன. அந்த வகையில், கடந்த முறை செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைனில் நடத்திவந்த அண்ணாபல்கலைக்கழகம் அந்த முறையை கைவிட்டுள்ளது.
பொறியியல் மாணவர்களுக்கான செமஸ்டர் தேர்வு மே மாதம் நடைபெற உள்ளது. கொரொனோ பாதிப்பு காரணமாக கடந்த முறை நடைபெற்ற செமஸ்டர் தேர்வுகளை பிரத்யேகமாக உருவாக்கப்பட்ட மென்பொருளை கொண்டு ஆன்-லைன் வழியில் அண்ணா பல்கலைக்கழகம் நடத்தியது.
இந்நிலையில், தற்போது அந்த முறையை அண்ணா பல்கலைக்கழகம் கைவிட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து வரும் மே மாதத்தில் நடைபெறவுள்ள செமஸ்டர் தேர்வின்போது மாணவர்கள் புத்தகத்தைப் பார்த்து தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டுள்ளது.
கேள்விகள் நேரடியாக கேட்கப்படாமல், மாணவர்கள் கேள்விகளை நன்கு புரிந்து கொண்டு அதற்கேற்ப விடையளிக்கும் வகையில் வினாத்தாள் தயாரிக்கப்பட உள்ளது. அதன்படி விடை எழுதும்போது ஏதேனும் சந்தேகம் ஏற்பட்டால் மாணவர்கள் புத்தகத்தை பார்த்து அறிந்து விடை அளிக்கலாம்.
அதேபோன்று தேர்வின்போது இணையதளத்தை பயன்படுத்தவும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது.மாணவர்களின் நலனில் அக்கறை கொண்டு இத்தகைய முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.