சென்னை ஆடுகளம் என்னை திகைக்க வைக்கிறது – மோர்கன் வியப்பு!
சென்னை ஆடுகள தன்மையை கணிப்பது கடினமாக உள்ளது; மேலும் அது என்னை திகைக்க வைக்கிறது என கொல்கத்தா அணியின் கேப்டன் மோர்கன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் தொடரின் 10-வது லீக் ஆட்டம் நேற்று சென்னை சேப்பாக்கத்தில் நடைபெற்றது. இதில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ்- ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிகள் மோதின. டாஸ் வென்ற விராட் கோலி பேட்டிங் தேர்வு செய்தார். அதன்படி ஆர்சிபி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 204 ரன்கள் குவித்தது. டி வில்லியர்ஸ் 34 பந்தில் 9 பவுண்டரி, 3 சிக்சருடன் 76 ரன்கள் எடுத்து ஆட்டமிழக்காமல் இருந்தார். ஜேமிசன் 4 பந்தில் 11 ரன் எடுத்தார்.205 ரன்கள் அடித்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 166 ரன்கள் மட்டுமே அடித்தது.
இதனால் ஆர்சிபி 38 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் தொடர்ந்து மூன்று வெற்றிகளை ருசித்துள்ளது. இந்நிலையில் நேற்றை ஆட்டம் குறித்து பேசிய விராட் கோலி, ``மேக்ஸ்வெல், டிவில்லியர்ஸ் ஆகியோர் அற்புதமாக ஆடினர். டிவில்லியர்ஸ் பார்மில் இருக்கும்போது அவரை கட்டுப்படுத்துவது இயலாத காரியம். வேகம் குறைந்த இந்த ஆடுகளத்தில் நாங்கள் 40 ரன்கள் கூடுதலாக எடுத்ததாக நினைக்கிறேன் என தெரிவித்தார்.
தோல்வி அடைந்த கொல்கத்தா கேப்டன் மோர்கன் கூறுகையில், ``நாங்கள் நினைத்ததை விட ஆடுகளம் நன்றாக இருந்தது. பேட்டிங்கில் இது பெங்களூரு அணிக்குரிய நாளாக அமைந்தது. சென்னை ஆடுகளம் என்னை திகைக்க வைக்கிறது. ஆடுகள தன்மையை கணிப்பது கடினமாக உள்ளது. சென்னையை விட்டு கிளம்பி இனி அடுத்த இடத்தில் விளையாட இருப்பது மகிழ்ச்சி என்றார்.