இளமையை தக்க வைக்கும்... செரிமானத்தை ஊக்குவிக்கும்

அன்னாசிப் பழத்தை விரும்பி சாப்பிடுவோர் பலருண்டு. இது தென் அமெரிக்காவை பூர்வீகமாக கொண்டது என்று கூறப்படுகிறது. தற்போது இந்தப் பழம் உலகின் பல பகுதிகளில் கிடைக்கிறது. அன்னாசிப் பழம் அதன் சுவைக்காக விரும்பப்பட்டாலும், அதில் மருத்துவ குணங்களும் அடங்கியுள்ளன. செரிமான கோளாறுகள் மற்றும் அழற்சி பாதிப்புகளை குணப்படுத்த அன்னாசிப் பழம் பயன்படுத்தப்படுகிறது.

அன்னாசிப் பழத்தில் அதிக அளவு வைட்டமின் சி மற்றும் மாங்கனீசு சத்து உள்ளது. ஒருநாளைக்குத் தேவையானதைப் போன்று 131 சதவீதம் வைட்டமின் சியும் 76 சதவீதம் மாங்கனீசும் இதில் உள்ளன. இதில் உணவு சார்ந்த நார்ச்சத்து அதிகம் உள்ளது. இளமையை தக்க வைக்கக்கூடிய புரோமிலின் என்ற நொதி (என்சைம்) அன்னாசிப் பழத்தில் அதிகம் உள்ளது.

ஒரு கப் (165 கிராம்) அன்னாசிப் பழத் துண்டுகளில் 82.5 கலோரி, 1.7 கிராம் கொழுப்பு, 1 கிராம் புரதம், 21.6 கிராம் கார்போஹைடிரேடு, 2.3 கிராம் நார்ச்சத்து, ஒரு நாளைக்குத் தேவையானதில் 9 சதவீதம் வைட்டமின் பி6, 9 சதவீதம் செம்பு (காப்பர்), 7 சதவீதம் ஃபோலேட், 5 சதவீதம் பொட்டாசியம், 5 சதவீதம் மெக்னீசியம் மற்றும் 3 சதவீதம் இரும்புச் சத்து ஆகியவை உள்ளன.

செரிமானம்

செரிமான பிரச்னைகளை தீர்க்கும் இயல்பு அன்னாசிப் பழத்திற்கு உள்ளது. இதில் அதிக அளவில் உள்ள புரோமிலின் புரத மூலக்கூறுகளை உடைக்கிறது. ஆகவே, சிறுகுடலில் இவை உறிஞ்சப்படுவது எளிதாகிறது. இதன் காரணமாக செரிமான பிரச்னைகளிலிருந்து நிவாரணம் கிடைக்கிறது. கணையம், செரிமானத்திற்குப் போதுமான நொதிகளை (என்சைம்) சுரக்காவிட்டால் அன்னாசிப் பழம் சாப்பிட்டால் பிரச்னை தீரும். இதில் அதிக அளவு நார்ச்சத்து மற்றும் நீர்ச்சத்து உள்ளதால், மலச்சிக்கலை தடுக்கிறது.

நோய் எதிர்ப்பு ஆற்றல்

அன்னாசிப் பழத்தில் பல்வேறு வைட்டமின்கள் மற்றும் தாதுகள் உள்ளன. இவை உடலில் நோய் எதிர்ப்பு ஆற்றலை அதிகரிப்பதுடன், எல்லாவித அழற்சிகளையும் குறைக்கின்றன. வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களால் ஏற்படக்கூடிய தொற்றுகளையும் தடுக்கிறது. சைனஸ் பிரச்னையால் பாதிப்புக்குள்ளாகும் சிறுபிள்ளைகள், சிகிச்சையுடன் அன்னாசிப் பழத்தை தொடர்ந்து சாப்பிட்டு வந்தால், விரைவில் குணம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.

முடக்குவாதம்

ஆர்த்ரிடிஸ் எனப்படும் முடக்குவாதம் முதுமையின்போது மூட்டுகளில் ஏற்படும் அழற்சி காரணமாக உருவாகிறதாகும். அன்னாசிப் பழத்திலுள்ள முதன்மையான புரோமிலின் என்னும் நொதி, அழற்சிக்கு எதிராக செயல்படும் பண்பு கொண்டதால், வலியிலிருந்து நிவாரணம் அளிக்கிறது.

எலும்புப் புரை (osteoporosis) போன்ற எலும்பு தொடர்பான குறைபாடுகளையும் அன்னாசிப் பழம் தடுக்கிறது.

சரும ஆரோக்கியம்

அன்னாசிப் பழத்திலுள்ள வைட்டமின் சி மற்றும் கரோட்டின் ஆகியவை சருமத்திற்கு நல்லது. இதைச் சாப்பிடுவதும் நன்மை செய்யும்; மேலே பூசினாலும் நன்மை செய்யும். வெயில் மற்றும் காற்று மாசு காரணமாக தோலில் ஏற்படக்கூடிய பாதிப்புகளை இது தடுக்கிறது.

More News >>