16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி
அமெரிக்காவில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவில் கொரோனா பாதிப்பு மற்றும் உயிரிழப்புகள் அதிகளவில் உள்ளன. இதனால் பிற நாடுகளை விட அமெரிக்கா எண்ணிக்கையில் முதல் இடம் பிடித்து உள்ளது. அமெரிக்காவில் இதுவரை கொரோனா உறுதி பாதித்தவர்கள் எண்ணிக்கை 3 கோடியே 17 லட்சத்து 16 ஆயிரத்து 799- ஆக உள்ளது. கொரோனாவுக்கு உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 5.67 லட்சமாக உள்ளது.
அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்:-
“அமெரிக்க மக்கள் தொகையில் 4 இல் ஒரு பங்கினர் கொரோனா தடுப்பூசியை பெற்றுள்ளனர். இதனால், அமெரிக்க மக்கள் தொகையில் 39 சதவீதத்தினர் குறைந்தது ஒரு டோசையும், 24.8 சதவீதத்தினர் முழு அளவிலும் தடுப்பூசி எடுத்து கொண்டுள்ளனர்” என தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அமெரிக்காவில் கொரோனா வைரசுக்கு எதிரான தடுப்பூசி போடும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், அமெரிக்காவில் 16 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி போட அனுமதி அளிக்கப்பட்டுள்ளதாக, அந்நாட்டு அதிபர் ஜோ பைடன் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். அதில், “இன்று முதல் 16-வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கொரோனா தடுப்பூசி போட தகுதியுடைவர்கள் ஆவர். தடுப்பூசி முற்றிலும் இலவசம் மற்றும் பாதுகாப்பானது.பெருந்தொற்றை நாம் இப்படித்தான் முடிவுக்க்கு கொண்டு வரப்போகிறோம். தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள். 16 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் தடுப்பூசியை போட்டுக்கொள்ளுங்கள்”என அவர் பதிவிட்டுள்ளார்.