உளவுத்துறை அளித்த ரிப்போர்ட் கலக்கத்தில் முதல்வர் – மீண்டும் ஆட்சி அமைக்குமா அதிமுக?
அதிமுக வரும் சட்டமன்ற தேர்தலில் எத்தனை இடங்களை பெறப்போகிறது என்பது குறித்து உளவுத்துறை அறிக்கை ஒன்றை அளித்துள்ளது. இது தான் முதல்வரை சற்று கலக்கமடையச் செய்துள்ளது.
முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகத்தில் மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என்பதில் நம்பிக்கையுடன் இருக்கிறார். காரணம், நீட் தேர்வில் 7.5சதவீதம் இட ஒதுக்கீடு வழங்கியது, வன்னியர்களுக்கான இட ஒதுக்கீடு, தேர்தல் அறிக்கையில் கவர்ச்சி திட்டங்கள், முதல் தலைமுறை வாக்காளர்களை கவர்ந்தது என எல்லாமே சேர்த்து அவரது நம்பிக்கைக்கு பலம் கூட்டும் என எடப்பாடி பழனிசாமி உறுதியாக உள்ளார்.
ஆனால், கள நிலவரம் அவர் எதிர்பார்த்தது போல் இல்லை என்பது தான் உண்மை என்கின்றனர் விவரமறிந்தவர்கள். இது தொடர்பாக அதிமுக வட்டாரங்களில், ``முதல்வர் எடப்பாடி பழனிசாமி மீண்டும் அதிமுக ஆட்சி அமைக்கும் என மிகுந்த எதிர்பார்ப்புடன் இருக்கிறார். ஆட்சி அமைக்க தவறும் பட்சத்தில் மீண்டும் சசிகலாவின் ஆதிக்கம் தலையெடுக்கும். இதனால் அவர் மீண்டும் கட்சியில் இணைய வாய்ப்புளதாக நம்புகிறார். அதேபோல ஆட்சி இல்லாத பட்சத்தில் ஓபிஎஸின் நடவடிக்கைகள் தனக்கு எதிராக திரும்பும் எனவும் அவர் நினைக்கிறார்.
முதல்வரின் தேர்தல் வியூக வகுப்பாளராகச் செயல்பட்டுவரும் சுனில் அண்மையில் ஒரு அறிக்கை ஒன்றை முதல்வரிடம் கொடுத்துள்ளார். அதில், “அதிமுக கூட்டணி 85-90 இடங்களில் வெற்றிபெறுவது உறுதி. மேலும் ஒரு 27 தொகுதிகளில் கடுமையான இழுபறி நிலவுகிறது. அதிலும் அதிமுகவுக்கே அதிக தொகுதிகள் கிடைக்கும்” என்று குறிப்பிட்டிருக்கிறார்.
இதற்கிடையே முன்னாள் உளவுத்துறை ஐஜியும், முதல்வருக்கு நெருக்கமானவருமான சத்தியமூர்த்தி தனி டீம்வைத்து ஆய்வு செய்திருக்கிறார். தேர்தலுக்குப் பிறகான கள நிலவரத்தை ஆய்ந்து அவர் முதல்வருக்குக் கொடுத்த ரிப்போர்ட்டில், 130 சீட்டுகள் அதிமுகவே வருமென்று சொல்லியிருக்கிறார்.
இதை ஒருபுறமாக வைத்துக்கொண்டு மாநில அரசின் உளவுத்துறை ரிப்போர்டையும் வாங்கி பார்த்திருக்கிறார் முதல்வர் எடப்பாடி பழனிசாமி தமிழக உளவுத்துறையினர் தேர்தல் முடிந்த உடனே அறிக்கை ஏதும் அனுப்பவில்லை, சற்று ஆராய்ந்த பிறகு அறிக்கை தருவதாக முதல்வரிடம் சொல்லியிருந்தனர். அந்த வகையில் தமிழக உளவுத்துறை முதல்வருக்குக் கொடுத்த டேட்டாவில், “85 சீட்டுகள் அதிமுகவுக்கு உறுதியாக கிடைக்கும். 40 தொகுதிகள் கடுமையான இழுபறியாக இருக்கின்றன” என்று கூறப்பட்டுள்ளது.
உளவுத்துறை கொடுத்த ரிப்போர்ட்டை வைத்துக்கொண்டு தனக்கு நெருக்கமான சில அமைச்சர்களிடம் விவாதித்திருக்கிறார். முதல்வர் எடப்பாடி பழனிசாமி. அவர்களில் உள்ளாட்சித் துறை அமைச்சர் வேலுமணியிடமும் இந்த ரிப்போர்ட் பற்றி விவாதித்துள்ளார். அந்த 40 தொகுதிகள் பட்டியலை பெற்ற வேலுமணி தனது ஏஜென்சி மூலம் அந்த 40 தொகுதிகளிலும் ஒரு பிரத்யேக ஆய்வினை நடத்தியுள்ளார். அதன்பின் முதல்வரிடம் பேசிய வேலுமணி, “அந்த 40 சீட்டுல 20 சீட்டுக்கு மேல நாம்தான் ஜெயிப்போம். நாமதான் ஆட்சி அமைப்போம். இதுல எந்த சந்தேகமும் இல்லை” என்று முதல்வரின் நம்பிக்கையை அதிகப்படுத்தியிருக்கிறார்.
ஒவ்வொரு கருத்துகணிப்புகளும் மாறி மாறி வர முதலமைச்சர் சற்று கலக்கத்தில் தான் இருக்கிறார். பிகே டீம் சொன்னதும் எடப்பாடி பழனிசாமி காதுக்கு சென்றுள்ளது. இருந்தாலும் மே 2ம் தேதி தான் உண்மை என்ன என்பது தெரியவரும் என்கிறார்கள் அதிமுக வட்டாரத்தில்..