தமிழகத்தில் ஆக்ஸிஜன் பற்றாக்குறை? – என்ன நடந்தது வேலூரில்.. பகீர் தகவல்!
வேலூரில் ஆக்ஸிஜன் பற்றாக்குறையால் 7 பேர் உயிரிழந்ததாக தகவல் வெளியானது. இது குறித்து மருத்துவமனை டீன் தொடர்ந்து மௌனம் காத்து வருவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் 4 பேர் உட்பட மொத்தம் 7 பேர் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்த விபரீதம் நடந்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உயிரிழப்பிற்கான காரணம் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
7 பேரின் உயிரிழப்பிற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமில்லை. வயது முதிர்வு, இதயப் பிரச்னை, சர்க்கரை நோய், வலிப்பு உட்பட வேறு காரணங்களால் அவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அவர் விளக்கமளித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த விளக்கம் உண்மைக்குப் புறம்பானது என்று இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
என்ன நடந்தது?
கொள்கலனில் சேமித்து வைக்கப்பட்டிருக்கிற ஆக்சிஜன் அளவு காலை முதலே குறைந்துள்ளது. ஆக்சிஜன் நிரப்பப்பட்ட டேங்கர் லாரி வருவதற்கு தாமதம் ஏற்பட்டதன் காரணமாக, கொள்கலனிலிருந்து கோவிட் வார்டுகளுக்கு விநியோகிக்கப்பட்ட ஆக்சிஜன் அளவு வழக்கத்தைவிட மிகவும் குறைக்கப்பட்டதாகவும், கொள்கலனிலிருந்த ஆக்சிஜன் ஐஸ் கட்டியாக உறைந்துவிட்டதால், நோயாளிகளுக்கு ஆக்சிஜன் செல்வதில் தடை ஏற்பட்டதாகக் கூறப்படுகிறது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் கொரோனா வார்டில் இருவர் உயிரிழந்த போதும் ஆக்சிஜன் தட்டுப்பாடுதான் காரணம் என்று குற்றச்சாட்டு எழுந்தது. அப்போதும், வேறு பிரச்னைகள் காரணமாக இரண்டுப் பேரும் இறந்துவிட்டதாக மாவட்ட நிர்வாகம் தெரிவித்தது.
அந்த சமயமும் மருத்துவமனை நிர்வாகம் தரப்பில் எந்தவொரு விளக்கமும் தரப்படவில்லை. இப்போதும் மருத்துவமனை டீன் செல்வி மௌனம் சாதிக்கிறார். மருத்துவமனையில் எது நடந்தாலும் விளக்கம் தர வேண்டிய இடத்தில் டீன் இருக்கிறார். ஆனால், எது நடந்தாலும் விளக்கம் சொல்லாமல் ஒளிந்து கொள்கிறார் என்று கொந்தளிக்கிறார்கள் இறந்தவர்களின் உறவினர்கள்.