இனி தினகரனுடன் இணைய மாட்டேன்: திவாகரன் அதிரடி சசிகலா குடும்பத்தில் பூகம்பம்

இனிவரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்படமாட்டேன். தினகரன் குடும்ப உறுப்பினர்களுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை துவங்கியுள்ளார் என்று சசிகலாவின் சகோதரர் திவாகரன் தெரிவித்துள்ளார்.

ஜெயலலிதா மறைவிற்கு பிறகு அவரது நெருங்கிய தோழி சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் சிறை தண்டனை பெற்று பெங்களூரு சிறையில் இருக்கிறார். அதன் பிறகு சசிகலா குடும்பத்திற்கு இடையில் பிளவு ஏற்பட்டுள்ளது.

ஜெயலலிதா சிகிச்சை பெற்ற வீடியோ வெளியானதில் இருந்து அவர்களது நடவடிக்கையில் வெளிப்படையாக தெரிகிறது. திவாகரனின் மகன் ஜெய் ஆனந்த் தனது முகநூல் பக்கத்தில், “மாபெரும் தவறுகளை பொறுத்து கொண்டு இருக்கிறோம். இந்த நிலை நீடித்தால் அந்த அமைப்பு விரைவில் சமைக்கப்படும்” என்று கூறியிருந்தார்.

இதனையடுத்து டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ. வெற்றிவேல் தனது முகநூல் பக்கத்தில், “மன்னிக்க முடியாத துரோகத்தாலும், மறக்க முடியாத சூழ்ச்சியாலும் சின்னம்மா அவர்கள் சிறைக்கு சென்ற பிறகு, பல்வேறு அடக்குமுறைகள், அத்துமீறல்களுக்கும் மத்தியில் கழகத்தை வலிமையோடு, முன்னெடுக்கும் பணியில் துணைபொதுச்செயலாளர் அண்ணன் TTV தினகரன் செயலாற்றி வருகிறார்…

ஆனால்,, எங்கள் தியாகத்தை கொச்சைபடுத்தும் நோக்கில், எங்கள் உணர்வை காயப்படுத்தும் எண்ணத்தில், சின்னம்மா குடும்பத்தை சார்ந்த திரு. திவாகரனும், ஜெய்ஆனந்தும் செயல்படுவது வேதனையளிக்கிறது… சின்னம்மாவின் மீது சுமத்தப்பட்ட பொய்யான வீண்பழிகளையும், தங்கள் குடும்பத்தின் மீது சுமத்தப்பட்ட பழி சொற்களையும் அண்ணன் தினகரன் கழகத்தை தலைமையேற்று நடத்திய இந்த காலகட்டத்தில் தான் முறியடிக்க முடிந்தது என்பதனையும் நினைவில் கொள்ளுங்கள்.

மதவாத சக்திகளுக்கு ஒருபோதும் அடிபணியக்கூடாது என்கிற காரணத்தினால் தான், சின்னம்மா நெஞ்சம் நிமிர்த்தி சிறைக்கு சென்றார். ஆனால் ஏதோ தங்கள் பின்னால் தான் 18 சட்டமன்ற உறுப்பினர்களும் இருக்கிறார்கள் என்பதுபோல் தோற்றத்தை உருவாக்கி, அதே மதவாத சக்திகளுக்கு அடிமையாகி போன பழனிசாமியோடு தொடர்பு வைத்துக்கொண்டு சின்னம்மாவை சிறையில் இருந்து மீட்கப்போகிறேன் என்கிற ரீதியில் திரு.திவாகரன் செயல்படுவது உண்மைக்கு புறம்பானது. இதனை முதலில் சின்னம்மா ஏற்றுக்கொள்வாரா?.

தங்களின் சுயலாபத்திற்காக கழகத்தையும், எங்களின் தியாகத்தையும் பலிக்கடாவாக முனையாதிர்கள்… நாங்கள் தெளிவாகத்தான் இருக்கிறோம், எங்களை குழப்பி, சுயலாபம் அடைய நினைக்காதீர்கள்” என்று தெரிவித்து இருந்தார்.

இந்நிலையில், மன்னார்குடியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த சசிகலாவின் சகோதரர் திவாகரன், “அரசியலில் நிரந்தர எதிரியும் கிடையாது, நண்பனும் கிடையாது. அம்மா மக்கள் முன்னேற்றம் கழகத்தை தினகரன் துவங்கியதை நாங்கள் ஏற்கவில்லை. இனிவரும் காலங்களில் தினகரனுடன் இணைந்து செயல்படமாட்டேன். தினகரன் குடும்ப உறுப்பினர்களுக்காக அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தை துவங்கியுள்ளார்.

கட்சி உறுப்பினர்களை கேட்காமல் தினகரன் தன்னிச்சையாக முடிவெடுக்கிறார். நானும் எனது மகனும் ஈபிஎஸ் அணியில் இணைய உள்ளதாக தவறான தகவலை பரப்புகின்றனர். முதல் அமைச்சர் பழனிசாமியுடன் பேச்சுவார்த்தை நடத்தவில்லை.

வெற்றிவேல், செந்தில் பாலாஜி கட்சிக்கு இடையில் வந்தவர்கள். அம்மா அணி என்ற பெயரில் நாங்கள் தொடர்ந்து செயல்படுவோம். தேவைப்பட்டால் தேர்தலில் தனித்து நிற்போம். அதிமுகவின் சுவடே இருக்க கூடாது என தினகரன் நினைக்கிறார். திராவிடமும் அண்ணா பெயரும் இல்லாத கட்சி பெயரை நாங்கள் ஏற்க முடியாது” என்று தெரிவித்துள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com

More News >>