`ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பதே தமிழகத்தில் கிடையாது.. விஜயபாஸ்கர்!
வேலூர் அடுக்கம்பாறையிலுள்ள அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில், கொரோனா நோயாளிகள் 4 பேர் உட்பட மொத்தம் 7 பேர் நேற்று அடுத்தடுத்து உயிரிழந்தனர். ஆக்சிஜன் பற்றாக்குறையால் இந்த விபரீதம் நடந்திருப்பதாக தகவல் வெளியானது. இந்த சம்பவம் தொடர்பாக மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் உடனடியாக மருத்துவமனைக்குச் சென்று உயிரிழப்பிற்கான காரணம் மற்றும் அவர்களுக்கு அளிக்கப்பட்டுவந்த சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார்.
7 பேரின் உயிரிழப்பிற்கு ஆக்சிஜன் பற்றாக்குறை காரணமில்லை. வயது முதிர்வு, இதயப் பிரச்னை, சர்க்கரை நோய், வலிப்பு உட்பட வேறு காரணங்களால் அவர்கள் உயிரிழந்திருக்கிறார்கள் என்று அவர் விளக்கமளித்தார். மாவட்ட ஆட்சியரின் இந்த விளக்கம் உண்மைக்குப் புறம்பானது என்று இறந்தவர்களின் உறவினர்கள் குற்றம் சாட்டியிருக்கிறார்கள்.
இதற்கிடையே, இது தொடர்பாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கூறுகையில், ``தமிழகத்தில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு என்பதே கிடையாது. இனியும் தட்டுப்பாடு இருக்காது. படுக்கை வசதி தட்டுப்பாடு என்பதும் இல்லை. அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனைக்கு சென்றிருந்தால் படுக்கை வசதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம். தற்போதைக்கு அனைவருக்கும் விடுக்கும் வேண்டுகோள், மக்கள் அனைவரும் முகக்கவசம் அணிய வேண்டும் என்பதே. தடுப்பூசி குறித்த வதந்திகளை மக்கள் அதனை நம்ப வேண்டாம். நமது மாநிலத்துக்கு கூடுதலாக 5 லட்சம் கோவாக்சின் தடுப்பூசியை எதிர் நோக்கி உள்ளோம்" என்றார்.