11 ஆயிரத்தை நெருங்கிய பாதிப்பு.. தனியார் மருத்துவமனைகளுக்கு தமிழக அரசு புதிய ஆணை!

இந்தியாவில் கொரோனாவின் இரண்டாம் அலை தீவிரமாக பரவி வருகிறது. கொரோனா பாதிப்பை பொறுத்தவரை, உலக அளவில் இந்தியா முதலிடத்தை வகிக்கிறது. தமிழகத்தை பொறுத்தவரை, நாள் ஒன்றுக்கு 10ஆயிரம் பேருக்கு கொரோனா பாதிப்பு பதிவாகி வருகிறது. இதை கட்டுபடுத்த தமிழக அரசு பல்வேறு புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. இன்று மட்டும் 11 ஆயிரத்தை நெருங்கியிருக்கிறது கொரோனா பாதிப்பு.

இதற்கிடையே, சில இடங்களில் மருத்துவமனைகளில் படுக்கைகள் பற்றாக்குறை இருப்பதாக புகார்கள் எழுந்தன. இது தொடர்பாக பேசிய தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், ``தமிழக மருத்துவமனைகளில் படுக்கை வசதி தட்டுப்பாடு என்பது இல்லை. அனைவரும் ஒரே நேரத்தில் ஒரே மருத்துவமனைக்கு சென்றிருந்தால் படுக்கை வசதி கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டிருக்கலாம்" என்றார்.

இந்நிலையில் தற்போது தமிழக அரசு ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி, தனியார் மருத்துவமனைகளில் கொரோனா சிகிச்சைக்கு 50% படுக்கைகளை ஒதுக்க வேண்டும் என சில நிமிடங்கள் முன்பு தமிழக அரசு ஆணை பிறப்பித்துள்ளது. மேலும், கொரோனா தவிர மற்ற சிகிச்சைகளை குறைத்துக் கொள்ளவும் அரசு தனியார் மருத்துவனைகளுக்கு அறிவுறுத்தியுள்ளது. அதிகரித்து வரும் கொரோனா நோயாளிகளுக்கு படுக்கை வசதிகளை உறுதி செய்யும் வகையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக அரசு சார்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

More News >>