தோனிக்கு பிறகு இவரை கேப்டனாக்கலாம்! – மைக்கேல் வாகன் கருத்து
தோனிக்கு பிறகு, சென்னை சூப்பர் கிங்க்ஸ் அணிக்கு கேப்டனாக ஜடேஜாவை நியமிக்கலாம் என இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன் தெரிவித்துள்ளார்.
ஐபிஎல் சீசனின் 12வது லீக் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கும் நடைபெற்றது. இந்த போட்டியில் சென்னை அணி 45 ரன்கள் வித்தியாசத்தில் ராஜஸ்தானை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
இந்த போட்டியில் தனி ஒருவனாக ஆல் ரவுண்டர் பர்பாமென்ஸை காட்டி கெத்து காட்டினார் ரவீந்திர ஜடேஜா. ஃபீல்டிங், பவுலிங் என பம்பரமாய் மைதானம் முழுவதும் சுழன்று மாஸ் காட்டினார். மைதானத்தில் எந்த பக்கம் பந்து சென்றாலும் அதை தடுப்பது ஜடேஜா என்பது போலவே ராஜஸ்தானுக்கு எதிரான ஆட்டம் அமைத்திருந்தது.
அதன் விளைவாக 4 கேட்ச், 2 விக்கெட் என அணியின் வெற்றிக்கு ஆணி வேராக திகழ்ந்தார் ஜடேஜா. இந்நிலையில் இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மைக்கேல் வாகன், தோனிக்கு பிறகு ஜடேஜாவை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வழிநடத்த நியமிக்கலாம் என தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர், ``“தோனி மேலும் இரண்டு அல்லது மூன்று சீசன்கள் இருப்பார் என எல்லோரும் கருதலாம். ஆனால் உண்மையை சொல்ல வேண்டுமென்றால். எனக்கு தெரிந்து அவர் அப்படி செய்யமாட்டார். அதனால் அணியை திறம்பட முன்னின்று வழிநடத்தி செல்லும் வீரரை அடையாளம் காண வேண்டியுள்ளது. என்னை கேட்டால் ஜடேஜாவை சார்ந்து அணியை அமைக்கலாம் அல்லது உருவாக்கலாம். அவர் பேட்டிங், பவுலிங் மற்றும் ஃபீல்டிங் என சகல விஷயத்திலும் வல்லவர்.
ஆட்டத்தின் மீது அவரது அணுகுமுறையும் அற்புதமாக உள்ளது” என தெரிவித்துள்ளார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 200 போட்டிகளில் கேப்டனாக இருந்து வழிநடத்தி உள்ளார் தோனி. அதோடு மூன்று முறை சாம்பியன் பட்டத்தையும் அணிக்காக பெற்று தந்துள்ளார். சென்னை அணியின் அடுத்த கேப்டன் ரேஸில் ரெய்னா, டூப்ளசிஸ் இருக்கையில் இப்போது ஜடேஜாவும் இணைந்துள்ளார்.