கொரோனா தடுப்பூசிகளை வீணாக்கியதில் தமிழகம் முதலிடம் - ஆர்டிஐயில் அம்பலம்!
தமிழ்நாட்டில் ஒரு புறம் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தாலும் இந்தியாவிலேயே அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில்தான் வீணாகி உள்ளதாக தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.
ஜனவரி மாதம் முதல் இந்தியாவில் முன்களபணியாளர்களுக்கும், சுகாதார பணியாளர்களுக்கும் கொரோனா தடுப்பூசியானது போடப்பட்டு வருகிறது. தற்போது கொரோனா இரண்டாம் அலையின் வீரியம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனை கட்டுபடுத்த முடியாமல், மத்திய, மாநில அரசுகள் திணறி வருகின்றன. பல்வேறு மாநிலங்களில் இரவு நேர ஊரடங்கு விதிக்கப்பட்டுள்ளது. மாநிலங்களில் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.
மார்ச் மாதத்தில் இருந்து 65 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கும் 45 வயதுக்கு மேற்பட்ட இணை நோய் உள்ளவர்களுக்கும் கொரோனா தடுப்பூசி போடப்பட்டுவருகிறது. நாடு முழுவதும் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணி தொடங்கும் என மத்திய அரசு அறிவித்தது.
தமிழ்நாட்டில் ஒரு புறம் தடுப்பூசி தட்டுப்பாடு நிலவி வந்தாலும் இந்தியாவிலேயே அதிகமான தடுப்பூசிகள் தமிழ்நாட்டில்தான் வீணாகி உள்ளன என்ற தகவல் அம்பலமாகியுள்ளது. அதாவது இதுவரை 12.1% தடுப்பு மருந்துகள் தமிழ்நாட்டில் வீணாகி உள்ளன. கொரோனா தடுப்பூசிகள் 10 டோஸ் அல்லது 20 டோஸ் என்று ஒரு குப்பியில் வரும்.
ஒரு குப்பியை திறந்த பிறகு நான்கு மணி நேரத்திற்குள் அனைத்து டோஸ்களும் போடப்பட வேண்டும். தடுப்பூசி செலுத்துவதற்கான நேரம் மாலையில் முடியும் போது கூடுதலாக தடுப்பு மருந்துகள் பயன்படுத்தப் படாமல் இருந்தால் அவை அடுத்த நாளுக்காக எடுத்து வைக்க முடியாது. அந்த வகையில், தமிழ்நாட்டில் 12.1% சதவீத தடுப்பு மருந்துகள் வீணாகி உள்ளன.
தமிழ்நாட்டுக்கு இதுவரை 47,03,590 கோவிஷீல்டு தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. மேலும் 8, 82,130 கோவாக்சின் வந்துள்ளன. மொத்தம் 55 லட்சத்து 85 ஆயிரத்து 720 தடுப்பு மருந்துகள் வந்துள்ளன. இன்று மேலும் 6 லட்சம் கோவிஷீல்டு தடுப்பு மருந்து தமிழகம் வரவுள்ளன. உலக சுகாதார நிறுவனம் தடுப்பூசி வீணாகுதல் சதவீதத்துக்கும் குறைவாக இருக்க வேண்டும் என அறிவுறுத்திருப்பது குறிப்பிடத்தக்கது.