ஆட்டோ ஓட்டி குடும்ப கஷ்டத்தை போக்கும் பெண் – கார் பரிசளித்து நெகிழ்ச்சியூட்டிய சமந்தா!
தனது 7 சகோதரிகளை காப்பாற்ற ஆட்டோ ஒட்டி வரும் பெண் ஒருவருக்கு நடிகை சமந்தா கார் ஒன்றை பரிசாக அளித்து நெகிழ்ச்சியூட்டிய சம்பவத்தை பலரும் பாராட்டி வருகின்றனர்.
தெலுங்கில் பிஸியாக நடித்து வரும் நடிகை சமந்தா தமிழில் இயக்குநர் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் காத்து வாக்குல ரெண்டு காதல் என்ற படத்தில் நடித்து வருகிறார். அண்மையில் தனியார் தொலைக்காட்சி சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார்.
அந்த நிகழ்ச்சியில் போட்டியாளராக கவிதா என்ற பெண்ணும் கலந்து கொண்டார். அப்போது கவிதா தனது வாழ்க்கையில் நடந்த சோகத்தை கூறினார். கவிதாவுக்கு 7 சகோதரிகள். வறுமையான குடும்பம். தனது பெற்றோர்கள் இறந்துவிட்டதால் 7 சகோதரிகளை கரை சேர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார். அம்மா, அப்பா இல்லாத காரணத்தால் வறுமையை போக்க, ஆட்டோ ஓட்டி அதன் மூலம் தனது வாழ்க்கையை நடத்தி வருவதாக அவர் உருக்கமாக தெரிவித்தார். இதை கேட்ட சமந்தா மனம் உருகிப்போனார்.
இதனையடுத்து, அந்த பெண்ணுக்கு உதவும் விதமதாக அந்த நிகழ்ச்சியிலேயே சமந்தா, பெண்மணிக்கு வாக்குறுதி ஒன்றை அளித்தார். அதாவது கார் டிராவல்ஸ் ஆரம்பித்து இன்னும் உயர கார் ஒன்றை பரிசாக அளிப்பதாக அந்நிகழ்ச்சியில் கவிதாவுக்கு உறுதியளித்திருந்தார். அவர், சொன்னபடியே கவிதாவுக்கு தற்போது 12.5 லட்சம் மதிப்புள்ள காரை பரிசளித்து நெகிழ வைத்திருக்கிறார். சமந்தாவின் இந்த செயலுக்கு பாராட்டுகள் குவிந்து வருகின்றன. சொன்னதை செய்த சமந்தாவின் இந்த செயல் பலருக்கும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.