4,500கோடி 3 மாதங்களில் 29 கோடி தடுப்பூசி – என்ன செய்யபோகிறது மத்திய அரசு?
இந்தியாவில் தடுப்பூசி உற்பத்தியை பெருக்க மத்திய அரசு ரூ.4,500 கோடி நிதி வழங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இன்னும் 3 மாதங்களில் 29 கோடி தடுப்பூசி கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
18 வயதுக்கு மேற்பட்ட அனைருவருக்கும் அடுத்த மாதம் 1-ந்தேதி முதல் தடுப்பூசி வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ள நிலையில் அதற்கான பணிகளில் தற்போது ஈடுபட்டு வருகிறது 3-வது கட்ட திட்டத்தில், மாதாந்திர உற்பத்தியில் சரிபாதி அளவை (50 சதவீதம்) தடுப்பூசி நிறுவனங்கள் மத்திய அரசுக்கும், மீதியை மாநில அரசுகளுக்கும் அல்லது சந்தைக்கும் வழங்கும்.
கோவிஷீல்டு தடுப்பூசியை புனேவின் சீரம் நிறுவனம் தயாரித்து வழங்குகிறது. சீரம் நிறுவனத்தின் தலைவர் தலைவர் ஆதர் பூனவாலா, கொரோனா வைரஸ் தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவதற்கு ரூ.3 ஆயிரம் கோடி தேவைப்படுகிறது என இந்த மாத தொடக்கத்தில் தெரிவித்திருந்தார்.
இந்த தடுப்பூசி உற்பத்தியை பெருக்குவதற்காக இந்திய சீரம் நிறுவனத்துக்கும், கோவேக்சின் தடுப்பூசி உற்பத்தியை அதிகரிப்பதற்கு ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனத்துக்கும் ரூ.4,500 கோடியை முன் பணமாக வழங்க மத்திய அரசு முடிவு எடுத்துள்ளது.
இதன்படி இந்திய சீரம் நிறுவனம் ரூ.3 ஆயிரம் கோடியையும், பாரத் பயோடெக் நிறுவனம் ரூ.1,500 கோடியையும் பெறும்.
ஒரு தடுப்பூசி டோசின் விலை ரூ.150 என்று ஏற்கனவே மத்திய அரசிடம் ஒப்புக்கொண்டுள்ள நிலையில், அந்த ஒப்பந்தத்தின் அடிப்படையில் இந்திய சீரம் நிறுவனம் 20 கோடி டோஸ் கோவிஷீல்டு தடுப்பூசிகளையும், பாரத் பயோடெக் நிறுவனம் 9 கோடி டோஸ் கோவேக்சின் தடுப்பூசிகளையும் வரும் ஜூலை மாதத்திற்குள் இந்தியாவுக்கு வழங்கும் என தெரிகிறது.
இந்தியாவின் தடுப்பூசி தேவையை சந்திக்க ஏற்ற வகையில், கோவேக்சின் தடுப்பூசியை ஆண்டுக்கு 70 கோடி டோஸ் அளவுக்கு உயர்த்துவதற்கு ஐதராபாத் பாரத் பயோடெக் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.
ஐதராபாத் மற்றும் பெங்களூருவில் உள்ள தடுப்பூசி உற்பத்தி ஆலைகளில் படிப்படியாக உற்பத்தி அதிகரிக்கப்படும் என்று பாரத் பயோடெக் நிறுவனம் நேற்று ஒரு அறிக்கையில் கூறி உள்ளது.