அமெரிக்காவில் என்கவுண்டர்... ஆப்பிரிக்க-அமெரிக்க இனத்தவரை சுட்டது போலீஸ்
அமெரிக்காவின் டெக்சாஸ் மாநிலத்தின் டாலஸ் கவுண்டியிலுள்ள கிராண்ட் பிராரி என்ற இடத்தில் போலீஸ் நடத்திய துப்பாக்கிச் சூட்டில், போலீஸை தாக்க முயன்றவர் பலியானார்.
திங்கள் பிற்பகல் ஐக்கியா அங்காடியின் வாகனங்கள் நிறுத்தும் பகுதியில் கறுப்பு நிற சொகுசு கார் ஒன்று நின்று கொண்டிருந்தது. அதனுள் ஒருவர் விழுந்து கிடப்பதையும், அவசர சமிக்ஞைக்கான விளக்குகள் எரிந்து கொண்டிருப்பதையும் பார்த்தவர்கள் காவல்துறைக்கு தகவல் கொடுத்தனர்.
சந்தேகத்திற்குரிய வாகனத்தை காவல்துறை அதிகாரிகள் நான்கு பேர் நெருங்கினர். உள்ளே இருந்த மனிதன் ஆயுதம் வைத்திருப்பதாக அவர்களுக்கு சந்தேகம் எழுந்தது.
காவல்துறையினர் முன்எச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்தபோது, காரினுள் இருந்தவர் துப்பாக்கியால் சுட ஆரம்பித்ததாகவும், போலீஸார் தங்களை காப்பாற்றிக் கொள்ள துப்பாக்கிச் சூடு நடத்தியதாகவும் கிராண்ட் பிராரி காவல்துறை தலைவர் ஸ்டீவ் டை தெரிவித்துள்ளார்.
சுடப்பட்ட மனிதன் என்ன நோக்கத்தில் அங்கே வந்திருந்தான் என்பது இன்னும் தெரியவில்லை என்றும் கூறினார். பதற்றமான சூழல் நிலவியதால் ஐக்கியா அங்காடியும், அருகிலுள்ள தேவாலயமும் மூடப்பட்டன.
இருபது ரவுண்டுகள் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதில், அங்காடியினுள் இருந்தவர்கள், போலீஸார் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்று தெரிகிறது. சம்பவத்தில் கொல்லப்பட்ட மனிதன் ஆப்பிரிக்க அமெரிக்க இனத்தை சேர்ந்தவன் என்பது தவிர வேறு எந்த விவரமும் இன்னும் புலனாகவில்லை.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com