மருத்துவமனை அலைக்கழிப்பு தாயை இழந்தேன் – கண்ணீர்மல்க கதறும் மகன்!
மருத்துவமனை நிர்வாகம் தன் தாய்க்கு சிகிச்சை அளிக்க மறுத்ததால் ஆம்புலன்சிலேயே அவர் இறந்து போன சோகம் அரங்கேறியுள்ளது.
தெலங்கானாவைச் சேர்ந்தவர் பிரதீப். இவரது தாய் ஜெயம்மா. கடந்த கடந்த ஞாயிற்றுக்கிழமை ஜெயம்மாவுக்கு கொரோனா காரணமாக உடல்நல பாதிப்பு ஏற்பட்டுள்ளது. உடனே 50 வயதான தனது தாய் ஜெயம்மாவை அழைத்துக் கொண்டு ஹைதராபாத் மாநகரில் பல மருத்துவமனைகளுக்குச் சென்றுள்ளார், பிரதீப். கொரோனா சான்றிதழ் இல்லாத காரணத்தால் எங்கேயும் சிகிச்சைக்கு அனுமதிக்கவில்லை.
இதனையடுத்து இறுதியா ஹைதராபாத் காந்தி அரசு மருத்துவமனையில் இருக்கும் கொரோனா சிகிச்சை மையத்திற்குச் சென்றுள்ளனர். கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாததால் அங்கேயும் நோயாளியை அனுமதிக்க முடியாது என மருத்துவமனை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கொரோனா பரிசோதனை சான்றிதழ் இல்லாத பிரதீப், ஒரு ஆதார் அட்டை நகலில் பின்னால் கொரோனா பாசிட்டிவ் என்று எழுதப்பட்டிருந்ததை காண்பித்துள்ளார். ஆரம்ப சுகாதார நிலையத்தில் பரிசோதனைக்கு சென்ற போது ஜெயம்மாவுக்கு, கொரோனா இருக்கிறது என்று மருத்துவமனை வழங்கிய ஆதாரம் தான் அது. அதைப்பார்த்த மருத்துவர்களும், இதையெல்லாம் ஏற்றுக்கொள்ள முடியாது என கூறி சிகிச்சை அளிக்க மறுத்துவிட்டனர்.
இறுதிவரை தனது தாய்க்கு சிகிச்சை அளிக்க மருத்துவமனை முன்வரவில்லை என பிரதீப் குற்றம்சாட்டுகிறார். இதனால் மருத்துவமனை வாசலில் ஒரு மணி நேரத்திற்கும் மேல் தன் தாயுடன் ஆம்புலன்ஸில் காத்துக் கிடந்தார் பிரதீப்.
இந்த நிலையில், ஆம்புலன்ஸில் துடித்துக்கொண்டிருந்த ஜெயம்மாவின் உயிர் பிரிந்தது. தன் கண் முன்னே தாய் இறப்பதை தடுக்க முடியவில்லையே என்ற ஆதங்கத்துடன், பிரதீப், தனது தாயின் உடலை ஜகன்குடாவில் உள்ள வீட்டிற்கு கொண்டு சென்றிருக்கிறார். பின்னர் அங்கிருந்து பொக்லைன் இயந்திரம் மூலம் அவரது உடல் சுடுகாட்டிற்கு எடுத்துச் செல்லப்பட்டது. உடலை கொண்டு சென்ற யாரும் பாதுகாப்பு கவச உடைகள் அணிந்திருக்கவில்லை. மருத்துவமனைகள் அலைகழித்ததால் தனது தாயை இழந்ததாக குற்றஞ்சாட்டிய பிரதீப், 'ஆர்ஐபி சொசைட்டி' என போனில் ஸ்டேடஸ் வைத்து தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.அவரால் வேறு என்ன செய்ய முடியும் ஸ்டேடஸ் வைப்பதை தவிர!