முன்னாள் பிரதமர் சொத்துகள் ஏலம்?
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துகளை ஏலம்விடக்கோரி ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் மனுதாக்கல்
பாகிஸ்தானில் 3 முறை பிரதமராக இருந்தவர் நவாஸ் ஷெரீப். தனது பதவிக்காலத்தில் ஊழல் செய்து சொத்துக்களை சேர்த்ததாக அந்நாட்டு நீதிமன்றம் தண்டனை வழங்கியது.
71 வயதான இவரின் உடல்நலத்தைக் கருத்தில் கொண்டு இஸ்லாமாபாத் நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு அவருக்கு இடைக்கால ஜாமீன் வழங்கியது. அதைத்தொடர்ந்து அவர் லண்டனுக்கு சிகிச்சைக்காக சென்றார். அவரது ஜாமீனை அந்த நாட்டின் உச்சநீதிமன்றம் மேலும் 6 வாரங்கள் நீட்டித்து 2020-ம் ஆண்டு மார்ச் மாதம் உத்தரவிட்டது. ஜாமீன் காலஅவகாசம் முடிந்தும், அவர் நாடு திரும்பவில்லை. இதையடுத்து, அவரை இஸ்லாமாபாத் நீதிமன்றம், தலைமறைவு குற்றவாளியாக அறிவித்தது. அவருக்கு எதிராக அல் அஜிசியா ஊழல் வழக்கில் ஜாமீனில் வெளிவரமுடியாத பிடிவாரண்டு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே, டோஷாகானா ஊழல் வழக்கில் நவாஸ் ஷெரீப் குடும்பத்துக்கு சொந்தமான சொத்துகள் ஜப்தி செய்யப்பட்டுள்ளன.
இந்த நிலையில் ஜப்தி செய்யப்பட்டுள்ள நவாஸ் ஷெரீப்பின் சொத்துகளை ஏலத்தில் விற்பதற்கு உத்தரவு பிறப்பிக்கக்கோரி ஊழல் தடுப்பு அமைப்பின் துணைத்தலைமை வழக்கறிஞர் சர்தார் முசாப்பர் கான் அப்பாசி, இஸ்லாமாபாத் ஊழல் தடுப்பு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
பாகிஸ்தான் முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்து விபரங்கள்:-
4 பதிவு செய்யப்பட்ட கம்பெனிகளில் பங்குகள் உள்ளன. 3 வெளிநாட்டு வங்கிக்கணக்குகள் உள்பட மொத்தம் 8 வங்கிக்கணக்குகள் உள்ளன. 1 லேண்ட் குரூசர் கார், 2 மெர்சிடஸ் கார்கள், 2 டிராக்டர்கள் இருக்கின்றன. லாகூர், ஷேகுபுரா, முர்ரி மற்றும் அப்போட்டாபாத் ஆகிய இடங்களிலும் சொத்துகள் உள்ளன
முன்னாள் பிரதமர் நவாஸ் ஷெரீப்பின் சொத்துக்களை ஏலம் விட நீதிமன்றம் அனுமதி வழங்கும் பட்சத்தில், ஏலத்தை நாட்டு மக்கள் யாரு வேண்டுமென்றாலும் எடுக்கலாம்.