விஜயபாஸ்கரை காப்பாற்ற கோப்புகளை மறைக்கும் அதிமுக அரசு - ஸ்டாலின் குற்றச்சாட்டு
லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.யையும் மாற்றி குட்கா வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் அதிமுக அரசு மூடுவிழா நடத்துகிறது என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “தமிழக அரசின் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் டாக்டர் விஜயபாஸ்கரை காப்பாற்றும் நோக்கத்தில், ரூ.40 கோடி லஞ்சப் பரிமாற்றம் செய்யப்பட்ட ‘குட்கா’ வழக்கை விசாரித்துக் கொண்டிருந்த லஞ்ச ஒழிப்புத்துறை கூடுதல் டி.ஜி.பி.யாக இருந்த மஞ்சுநாதாவை, எவ்வித காரணமுமின்றி ஓராண்டு காலத்திற்குள்ளாகவே மாறுதல் செய்திருப்பது கடும் கண்டனத்திற்குரியது.
மதுரை ஐகோர்ட்டு கிளை, சுதந்திரமான லஞ்ச ஒழிப்புத்துறை விசாரணைக்கு உத்தரவிட்டு, அந்த விசாரணையை மேற்கொள்ள லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையராக ஐ.ஏ.எஸ். அதிகாரி வி.கே.ஜெயக்கொடி நியமிக்கப்பட்டார். விசாரணை மேற்கொண்டிருந்த ஜெயக்கொடியை 8-1-2018 அன்று மாற்றியது அதிமுக அரசு.
இப்போது அந்த லஞ்ச ஒழிப்புத்துறை ஆணையத்தின் கீழ் இயங்கும் லஞ்ச ஊழல் தடுப்புத்துறையின் கூடுதல் டி.ஜி.பி.யையும் மாற்றியுள்ளது. இதில் இருந்து, குட்கா வழக்கு தொடர்பான அனைத்து விசாரணைகளுக்கும் மூடுவிழா நடத்துகிறது அ.தி.மு.க. அரசு என்பது தெளிவாகியுள்ளது.
ஏற்கனவே குட்காவில் தொடர்புடைய அதிகாரிகள், அமைச்சர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி தலைமைச் செயலாளருக்கு வருமான வரித்துறை அனுப்பிய கோப்பையே காணவில்லை என்றார்கள். அப்படி காணாமல்போன கோப்பிற்கு காரணமான அதிகாரிகள் மீது இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பதில் இருந்தே, கோப்பு காணவில்லை என்பது இட்டுக்கட்டிக் கூறப்பட்டது என்று புலப்படுகிறது.
ஆகவே, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள குட்கா வழக்கில் தீர்ப்பு வருவதற்குள், அதுதொடர்பான விசாரணை அதிகாரிகளை மாற்றி, குட்கா சம்பந்தப்பட்ட கோப்புகளை மறைக்கும் அதிமுக அரசும், அதற்கு துணைபோகும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ரூ.40 கோடி குட்கா ஊழலுக்கும், மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத குட்கா விற்பனைக்கும் நிச்சயம் பதில்சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்.
ஆகவே, ஐகோர்ட்டில் நிலுவையில் உள்ள குட்கா வழக்கில் தீர்ப்பு வருவதற்குள், அதுதொடர்பான விசாரணை அதிகாரிகளை மாற்றி, குட்கா சம்பந்தப்பட்ட கோப்புகளை மறைக்கும் அதிமுக அரசும், அதற்கு துணைபோகும் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியும், ரூ.40 கோடி குட்கா ஊழலுக்கும், மாநிலத்தில் நடைபெறும் சட்டவிரோத குட்கா விற்பனைக்கும் நிச்சயம் பதில்சொல்ல வேண்டிய சூழ்நிலை வரும் என்று தெரிவித்துக்கொள்ள விரும்புகிறேன்” என்று குற்றம் சாட்டியுள்ளார்.
மேலும் பல செய்திகளுக்கு - thesubeditor.com